வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜ.கவுக்கு இன்னும் 5 ஆண்டுகள் தேவை: சுப்பிரமணியன் சுவாமி

  Newstm News Desk   | Last Modified : 09 Jul, 2018 08:36 am

bjp-needs-5-more-years-to-fullfill-its-promises-subramanian-swamy

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

மும்பையில் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் இந்தியாவின் மிகப்பெரிய கதை எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியின் சுவாமி பங்கேற்றார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பொருளாதார வளர்ச்சி என்றுமே வாக்குகளை கொண்டு வராது. கடந்தமுறை பா.ஜ.க ஆட்சியில் இருந்த போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியா ஒளிர்கிறது என்று அரசு சார்பில் பிரச்சாரம் செய்தார். ஆனால், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை, தோல்வியில் முடிந்தது.

ஆனால், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க இந்துத்துவா மீதும், ஊழல் இல்லாத அரசு மீதும் நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்தித்தது. அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.கவின் வெற்றிக்கு இந்துத்துவாதான் துணை புரிந்தது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014ம் ஆண்டு தேர்தலில் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கிவிட்டது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் கூடுதலாக இன்னும் 5 ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும். கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் என நான் கூறவில்லை. நாங்கள் என்ன கூறினோமோ அதை செய்துமுடிக்க இன்னும் 5 ஆண்டுகள் தேவை. நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக நல்ல நிலைமையில் இல்லை. நான் இப்போது நிதி அமைச்சராகவும் இல்லை. நாட்டில் மக்கள் மீது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளை நீக்க வேண்டும் என்பது தான் என் கருத்து" என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close