ஜியோ பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை: மத்திய அரசு விளக்கம்!

  Padmapriya   | Last Modified : 11 Jul, 2018 04:36 pm

jio-institute-gets-eminence-status-with-iits-and-iisc

இன்னும் தொடங்கப்படாத ரிலையன்ஸ் குழும அறக்கட்டளையின் ஜியோ பல்கலைக் கழகத்துக்கு மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து (இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்) வழங்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜியோ பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் நோக்கம் மட்டுமே உள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் பல்கலைக் கழகங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இதற்காக, மூன்று அரசு மற்றும் மூன்று தனியார் பல்கலைக் கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் தரத்தை உயர்த்த ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக் குழு இந்த பல்கலைக் கழகங்களை தேர்வு செய்துள்ளது.

இதற்காக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மானியம் வழங்கும் நோக்கில், பல்வேறு பல்கலைக்கழகங்களை இக்குழு ஆய்வு செய்து ஆறு கல்வி நிறுவனங்களை இந்த குழு தேர்வு செய்திருந்தது.  அந்த வகையில் ஐஐடி- டெல்லி , ஐஐடி- மும்பை மற்றும் இந்திய அறிவியல் கழகம் ஆகிய மூன்று அரசு சார் கல்வி நிறுவனங்களுக்கும் பிட்ஸ் பிலானி, மணிப்பால் ஆகாடமி மற்றும் நவி மும்பையில் ரிலையன்ஸ் குழுமம் நிறுவ இருப்பதாக அறிவித்துள்ள ஜியோ பல்கலைக்கழகம் ஆகியவைக்கு மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "சிறப்பு அந்தஸ்து பெறப் போகும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளோம். இது இந்திய கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த முக்கிய புள்ளியாக இருக்கும். நம் நாட்டில் 800 பல்கலைக்கழங்கள் இருக்கின்றன. ஆனால், ஒன்று கூட உலகின் டாப் 200 பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இடம் பெறுவதில்லை. அந்த நிலை இந்த நடவடிக்கை மூலம் மாறும்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

பிட்ஸ் பிலானி, மணிப்பால் பல்கலைக் கழகங்கள் பல ஆண்டுகளாக உள்ளன. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக் கழகமோ இன்னும் செயல்படக் கூடத் தொடங்கவில்லை. பல்கலைக் கழகத்தை நிறுவுவதற்கான அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாத பெயர் அளவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்துக்கு மத்திய அரசு எப்படி சிறப்பு அந்தஸ்து வழங்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் கூறுகையில் , "பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, மீண்டும் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி ஆகியோருக்கு சாதகமாக ஒரு முடிவை எடுத்துள்ளது. இன்னும் தொடங்கவேப்படாத 'ஜியோ பல்கலைக்கழகத்துக்கு' எப்படி அரசு சிறப்பு அந்தஸ்து கொடுத்தது. இது குறித்து விளக்கம் வேண்டும்" என்று கூறியுள்ளது.

இதனிடையே இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஜியோ கல்வி நிறுவனத்துக்கு தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. அத்தகைய சிறப்பு அந்தஸ்தை அத்தகைய கல்வி நிறுவனத்துக்கு வழங்கும் நோக்கம் இருப்பதை தெரிவிப்பதகான கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்த்தை பெற அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து வகையிலும் ஜியோ பல்கலைக்கழகம் தம்மை தகுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே அந்தஸ்து வழங்கப்படும். 

நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை இந்த கல்வி நிறுவனம் பூர்த்தி செய்யாமல் இருந்தால் அளிக்கப்பட சிறப்பு அந்தஸ்த்தை திரும்பப் பெரும் அதிகாரமும் நிபுணர் குழுவுக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close