நீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 05:57 pm

cbse-files-appeal-against-the-madras-high-court-s-order-on-neet

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்ககோரிய மதுரைக்கிளையின்  உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் அதிகமான அளவில் பிழைகள் இருந்ததாகவும், இதனால் மாணவர்கள் மிகுந்த குழப்பமடைந்ததாகவும் ஒரு சர்ச்சை கிளம்பியது. இந்த விவகாரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீட் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களில் எழுத்துப்பிழைகள் இருந்ததாகவும், வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இந்த வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும், அந்த மதிப்பெண்களை சேர்த்து 2 வாரத்துக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள்உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் ஜூலை 16, 17, 18 தேதிகளில் நடக்க இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில்  சிபிஎஸ்இ மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது. மனுவில், "196 மதிப்பெண்கள் என்பது மிகவும் அதிகமானது. அவ்வளவு மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்கினால் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும்" என கூறப்பட்டுள்ளது.  இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு கருத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
[X] Close