சுவிஸ்-ல் கேட்பாரற்று கிடக்கும் 3 இந்தியர்களுக்கு சொந்தமான ரூ.300 கோடி - யார் அவர்கள்?

  Padmapriya   | Last Modified : 16 Jul, 2018 03:01 pm
no-claimants-for-rs-300-crore-lying-in-india-linked-dormant-swiss-bank-accounts

சுவிஸ் நாட்டு வங்கியில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் ரூ.300 கோடி பணம் மூன்று இந்தியர்களுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. 

உலக அளவில் உள்ள பணக்காரர்கள், வரி ஏய்ப்பு செய்து குவிக்கும் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வருகின்றனர். அங்கு யாருடைய பணம் என்ற ரகசியம் எந்த சூழலிலும் வெளிப்படாது. மிகவும் நம்பகமானது, பாதுகாப்பானது. இதனால், இந்திய கோடீஸ்வரர்களும் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த பணத்தை கைப்பற்றினால், பல ஆண்டுகளுக்கு வரி இல்லா பட்ஜெட்டை போட முடியும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இந்தக் கருப்புப் பணத்தை மீட்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக பணம் முதலீடு செய்து இருப்பவர்களின் பெயர்களை சுவிஸ் வங்கிகள் வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்தப் பட்டியல் வருடாவரும் அங்கிருக்கும் பல்வேறு வங்கிகளால் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் மூன்றாவது ஆண்டாக சுவிஸ் தேசிய வங்கி,  தங்களிடம் கணக்கு வைத்துள்ள உள்ளூர் மற்றும் வெளி நாட்டவர்கள் பற்றிய விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில இந்தியர்கள் பெயர்களும் உள்ளன.

அவற்றில் 6 பேர், தங்களது கணக்குகளில் உள்ள பணத்தை உரிமை கோராமல் இருக்கும் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கம், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை தங்கள் நாட்டில் குவிப்பதை தடுக்க சட்டங்களை திருத்தி கடுமையாக்கியது. இதனால் சிலர் தங்கள் பணத்துக்கு உரிமை கோராமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், அந்த 6 பேரில் மூன்று இந்தியர்களாம். இந்த 3 பேருக்கும் சொந்தமான பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த இந்தியர்கள் குறித்த விவரங்களை சுவிஸ் வங்கி வெளியிடவில்லை. எனினும், குறிப்பிட்ட அந்த 3 பேர் அல்லது அவர்களது வாரிசுதாரர்கள் உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சுவிஸ் தேசிய வங்கி அறிவித்துள்ளது. மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு, யார் அந்த மூன்று பேர் என்பதை கண்டறிவதுடன், பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்று இந்திய மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் 2017ம் ஆண்டில், இந்திய பணக்காரர்கள்  ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தை முதலீடு செய்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close