நீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2018 12:55 pm

minister-prakash-javadekar-blames-tamil-translators-in-neet-question-paper-issue

நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக அரசு அனுப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் தான் முழு காரணம் என மத்திய அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் அதிகமான அளவில் பிழைகள் இருந்ததாகவும், இதனால் மாணவர்கள் மிகுந்த குழப்பமடைந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீட் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களில் எழுத்துப்பிழைகள் இருந்ததாகவும், வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இந்த வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும், அந்த மதிப்பெண்களை சேர்த்து 2 வாரத்துக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் நடக்க இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து அகில இந்திய மருத்துவ கலந்தாய்வுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இதற்கிடையே, சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு கருத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில், சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 16 அன்று மேல்முறையீடு செய்தது. மனுவில், "196 மதிப்பெண்கள் என்பது மிகவும் அதிகமானது. அவ்வளவு மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்கினால் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். ஒரு தமிழ் மாணவர் 500 மதிப்பெண்களை பெற்றிருந்தால் அவருக்கு 196 மதிப்பெண்கள் அளித்தால் மதிப்பெண் 700யைத் தொட்டு விடும். தேர்வின் மொத்த மதிப்பெண்களே 720 தான். இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். எனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.  

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுந்த போது அதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்தார். அப்போது அவர், "நீட்தேர்வு தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பு தவறுக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு. நீட் வினாத்தாளை மொழிபெயர்க்க  தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை அனுப்ப மத்திய அரசு கோரியது. அவர்கள் அனுப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் தான் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ள வினாத்தாளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனவே, நீட் வினாத்தாள் பிழைகளுக்கு அந்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம்.  இதற்கு மத்திய அரசு பொறுப்பல்ல.

இதுபோன்ற குளறுபடிகள் பிற்காலத்தில் ஏற்படாமல் இருக்க, மொழிபெயர்ப்பாளர்களிடம் இருந்து ஒரு அஃபிடவிட் வாங்க வேண்டும். 'மொழிபெயர்ப்பில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்கு நாங்களே பொறுப்பு' என அவர்கள் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு நீட் விவகாரத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், நாளை இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. விசாரணைக்கு பிறகே என்ன நடக்கும் என்பது தெரிய வரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close