Breaking நீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 03:50 pm

sc-stays-madurai-high-court-branch-s-order-on-neet

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. 

கடந்த மே மாதம் 6ம் தேதி நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு முன் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், 'தமிழகத்தில் போதிய தேர்வு மையங்கள் இல்லை என்ற காரணத்தால் சில மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது' என சிபிஎஸ்இ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

தேர்வுக்கு பிறகு தமிழக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள்களில் மொழிப்பெயர்ப்பு தவறுகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் Cheetah என்ற வார்த்தையை தமிழில் சிறுத்தை என்றும் மொழிப்பெயர்க்காமல் சீட்டா என்றே குறிப்பிட்டு இருந்தனர். 

இது போன்ற தமிழ் மொழி வினாத்தாளில் 49 கேள்விகளில் பிழை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கம்யூனிஸ்ட் எம்.பி ரெங்கராஜன் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதிமன்றம், "எந்த அகராதியை பார்த்து மொழிப்பெயர்த்தீர்கள்" என்று கடுமையாக சாடி இருந்தது.

மேலும் மொழிபெயர்ப்பில் பிழை இருந்த 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதற்கு முன்பே மனுதாரர் சார்பில் இவ்வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கேட்டுக்கொண்டது. இதனையடுத்து இன்று இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்றது. 

அப்போது ரங்கராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் அத்தனை பிழைகள் இருந்தன. இது போன்ற பிழைகளால் பல மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது" என்றார். 

இதற்கு பதிலளித்து எதிர் தரப்பு வழக்கறிஞர், "இது போன்ற சந்தேகங்கள் எழும் என்பதால் தான் ஆங்கிலத்திலும் கேள்வியை கேட்டிருந்தோம். அதனால் இது பிழைகள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை" என்றார். 

விசாரணையின் முடிவில், "ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இவ்வளவு பெரிய தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு சிறு சிறு வார்த்தைகளுக்கு கூட அர்த்தம் தெரியாதா..?" என்று கேள்வி எழுப்பினார். 

முடிவில் தமிழக மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.