2 கேரள போலீசாருக்கு தூக்கு தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 09:49 am

2-kerala-policemen-sentenced-to-death

கேரளா மாநிலத்தை சேர்ந்த இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்களுக்கு, கைதியை சித்தரவதை செய்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 3 போலீஸ் அதிகாரிகளுக்கு 3 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2005ம் ஆண்டு, திருவனந்தபுரத்தின் கோட்டை காவல் நிலையத்திற்கு ஒரு திருட்டு வழக்கில் உதய் குமார் மற்றும் சுரேஷ் குமார் என்ற இரண்டு நண்பர்கள் கைது செய்து கொண்டு வரப்பட்டனர். அதில் உதய் குமார் சிறிது நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டார். அப்போது அவரிடம் இருந்த 4000 ரூபாயை காவல்துறை கான்ஸ்டபிள்கள் எடுத்துக் கொண்டதாக கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடுப்பான காவலர்கள் இருவரும் சேர்ந்து, ஒரு இரும்பு கம்பியால் உதய் குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமாய்ந்த அவர் போலீஸ் காவலிலேயே உயிரிழந்தார். 

தனது மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு, உதய் குமாரின் தாயார், கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு கான்ஸ்டபிள்கள் ஜீத்து குமார் மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாகவும், சப்-இன்ஸ்பெக்டர்  அஜித் குமார், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சாபு, துணை கமிஷனர் ஹரிதாஸ் ஆகியோர் ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 

13 வருடங்களுக்கு பின், இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம், முக்கிய குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்தும், மற்ற மூவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது. 

"கடைசியாக எனது மகனுக்கும், எனக்கும் நீதி கிடைத்துவிட்டது. மக்கள் மீது கை வைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு படமாக அமைய வேண்டும். எனது மகனுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நேர கூடாது" என கண்ணீருடன் கூறினார் உதய் குமாரின் தாய் பிரபாவதி. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close