5 மாநிலங்களை புரட்டிப் போட்ட மழை: 465 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 07:28 am

465-dead-in-5-states-due-to-rains-floods-during-monsoon

 ஐந்து மாநிலங்களில் பருவமழை மற்றும் வெள்ளத்தால் 464 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை துவங்கியதில் இருந்து கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் தலைநகர் மும்பை உட்பட பல நகரங்கள் கனமழையால் வெள்ளத்தில் மிதந்தன. 

தமிழகத்தை தவிர்த்து மற்ற தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களை பருவ மழை புரட்டிப்போட்டுள்ளது. இது குறித்து தேசிய அவசர கால மீட்பு மையம் அளித்துள்ள தகவலின்படி, "ஐந்து மாநிலங்களில் பருவமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு, ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தில் சிக்கி மகாராஷ்டிராவில் 139 பேர் பலியாகி உள்ளனர். அதே போல, கேரளாவில் 125 பேரும் மேற்கு வங்கத்தில் 116 பேரும் குஜராத்தில் 52 பேரும் அசாமில் 32 பேரும் உயிரிழந்தனர். 

மேலும், மகாராஷ்டிராவில் 26 மாவட்டங்களும் மேற்கு வங்கத்தில் 22,  அசாமில் 21, கேரளாவில் 14, குஜராத்தில் 10 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அசாமில் மொத்தம் 10.17 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 2.17 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில், தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 12 குழுவினர், தீவிர பணிகளில் ஈடுபட்டு உள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது. ஆனால், தென்மேற்கு பருவமழை முடிந்து, வட கிழக்கு பருவமழை தொடங்கும்போது தமிழகத்துக்கு போதுமான மழை கிடைக்குமா என்ற கவலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close