ஆதார் எண்ணை வெளியிட்டு சவால் விட்ட டிராய் தலைவர்: அதிர்ச்சிக் கொடுத்த பாதுகாப்பு நிபுணர்

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 12:12 pm
trai-cheif-rs-sharma-posts-aadhaar-number-on-twitter-gets-back-own-details

தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் பிரான்ஸை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர்.

ஆதார் எண் பாதுகாப்பானது தானா? என்ற கேள்விக்கு இன்றும் பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஆதாரில் இணைக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக அரசு தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இதில் சந்தேகங்களை கிளப்பும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, “உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்த விவரத்தை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்' என பதிவிட்டிருந்தார்.

அவர் ட்வீட் செய்த சில மணிநேரங்களில், பிரான்ஸை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்ற பாதுகாப்பு நிபுணர், ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.

“வெளியிடப்பட்ட தகவல்கள் போதும் என நினைக்கிறேன். அதனால் நிறுத்திக்கொள்கிறேன். ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டது தவறு என்பதை தற்போது புரிந்துகொள்வீர்கள் என்பதை நம்புகிறேன்” என எல்லியட் ஆல்டர்சன் ஷர்மாவுக்கு பதில் கூறியிருந்தார்.

எல்லியட் ஆல்டர்சன் வெளியிட்ட தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல், “செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக நான் சவால் விடுக்கவில்லை. என்னுடைய ஆதார் எண் மூலம் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் என்ன செய்யமுடியும்? என்பதே சவால்” என மீண்டும் ஷர்மா ட்வீட் செய்திருந்தார். எனினும் மீண்டும் ஆதார் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close