டெல்லி அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு சிறுமி வன்புணர்வு: எலக்ட்ரீஷன் கைது 

  Padmapriya   | Last Modified : 11 Aug, 2018 02:28 pm

delhi-police-arrests-electrician-for-raping-class-2-student-in-school

டெல்லி அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவி (6 வயது) மிரட்டி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் அப்பள்ளியின் எலக்ட்ரீஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.  அரசு பள்ளி வளாகத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பொதுமக்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் கடந்த வியாழக்கிழமை அரசு பள்ளியில் பணியாற்றி வந்த எலக்ட்ரீஷன் ஒருவர், 2ஆம் வகுப்பு மாணவியை வளாகத்தின் உள்ளே தண்ணீர் பம்பு செட் இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.   டெல்லி அரசு பள்ளி வளாகத்தில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு எலக்ட்ரீஷன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை அரசு பள்ளியில் பணியாற்றி வரும் எலக்ட்ரீஷன் ஒருவர், இரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியை பள்ளி வளாகத்தின் தண்ணீர் பம்பு செட் இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் தெரிவிக்க கூடாது என்றும் மாணவியை மிரட்டியுள்ளார்.

மாலை வீடு திரும்பிய மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால், மாணவியின் பெற்றோர் பதற்றமடைந்து காவல் துறையில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல் துறையினர், சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து அரசு பள்ளியில் பணியாற்றி வரும் 37வயது எலக்ட்ரீஷனை கைது செய்துள்ளனர். பள்ளி நேரம் முடிந்த பின்னர், இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் மதூர் வெர்மா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் கத்துவாவில் 8 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானார். நாட்டையே பதறவைத்த இந்தச்  சம்பவத்தை தொடர்ந்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
[X] Close