துணை ஜனாதிபதி பதவியால் சுதந்திரம் இல்லை: வெங்கையா நாயுடு ஓபன் டாக்

  சுஜாதா   | Last Modified : 14 Aug, 2018 08:37 am
vice-president-is-not-independent-venkaiah-naidu

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தென்னிந்திய பத்திரிகையாளர்களுடன், துணை குடியரசு தலைவர்  வெங்கையா நாயுடு ஜொலியான உரையாடல் நடத்தினார். அப்போது அவர் தனது துணை குடியரசு தலைவர் பதவியால், தனது சுதந்திரம் பறிபோனதாகவும், மக்களோடு பழக முடியவில்லை என்றும் வருந்தி பேசியதுடன்,  பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.    

 பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது:-

"முன்பு நான் மந்திரியாக இருந்தேன். அப்போது மக்களோடு மக்களாக பழக முடிந்தது. வேலையும் நிறைவாக இருந்தது. எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பதுதான் எனது பலமும், பலவீனமும். எனது கண் முன் தவறு நடப்பது தெரிந்தால் உடனே அதை கண்டிப்பேன். ஆனால் தற்போது துணை ஜனாதிபதி பதவியில் அந்த சுதந்திரம் இல்லை.

பிறரைப் பற்றி எந்த கருத்தும் கூற முடியவில்லை. சுதந்திரமாக பேச முடியவில்லை. சுதந்திரமாக திரிய முடியவில்லை. என்னைச் சுற்றி எந்த நேரமும் போலீசார் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள். டாக்டர் குழுவும் என்னைச் சுற்றி சுற்றி வருகிறது. வீட்டில் எல்லா அறைகளிலும் ஒரு சிவப்பு ‘சுவிட்சு’ வைத்திருக்கிறார்கள். அதை அழுத்தினால் அடுத்த நிமிடம் எங்கே கொண்டு செல்ல வேண்டுமோ, அங்கே கொண்டு சென்று விடுவார்கள். குண்டு துளைக்காத காரில்தான் எங்கும் செல்கிறேன்.

இந்திய அரசியல் சாசன விதிகளின்படி துணை ஜனாதிபதி பதவி நாட்டிலேயே 2-வது உயரிய பதவி. பொதுவாக நான் எந்த நிகழ்ச்சியானாலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பேன். ஆனால் துணை ஜனாதிபதி பதவியால் எந்த நிகழ்ச்சிக்கும் அது தொடங்குவதற்கு முன்பு செல்ல முடியாது. பாதுகாப்பு காரணங்களால் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

முன்பெல்லாம் எனது நேரத்தை நானே வகுத்தேன். ஆனால் தற்போது நேரம் என்பது எனது கையில் இல்லை. மக்களோடு மக்களாக எனது நேரத்தை நான் செலவிட முடியவில்லை. அதனால் இந்த பதவியால் நான் நிம்மதியாக இல்லை.

தாய்மொழி அனைவருக்கும் அவசியம் என்று நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். நான் நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவரான பிறகுதான் பட்டியலில் உள்ள மாநில மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு வசதி ஏற்படுத்தப்பட்டது. தாய்மொழி மிகவும் அவசியம் என்பதை உணர்த்தத்தான் அவ்வாறு செய்யப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் அதிகம் பேசப்படும் மொழியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு தமிழ்தான் தேவை. ஆனால் வட இந்தியாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்லும்போது இந்தி அல்லது ஆங்கிலம் தேவைப்படுகிறது. எனவேதான் இந்தியை கற்க வேண்டும் என்று சொல்கிறேனே தவிர, இந்தியை திணிப்பதற்காக அல்ல.

நான் இந்தியா முழுவதும் பல இடங்களுக்கு செல்கிறேன். அங்கெல்லாம் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு சங்கங்களின் தலைவர்களை சந்தித்து பேச விரும்புவேன். விவசாயிகள் என்னை சந்திக்க விரும்பினால் உடனே சந்திப்பேன். ஏனென்றால் நமக்கு உண்ண உணவு அளிப்பவர்கள் அவர்கள்தான்." இவ்வாறு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close