முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது!

  முத்துமாரி   | Last Modified : 17 Aug, 2018 05:31 pm

vajpayee-funeral-with-military-honours-at-smriti-sthal-delhi

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லி ஸ்ம்ரிதி ஸ்தல் என்ற இடத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று(ஆகஸ்ட் 16) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். நேற்று வாஜ்பாயின் உடல் மருத்துவமனையில் இருந்து டெல்லியில் உள்ள அவரது வீடு மற்றும் பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் மோடி, அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது இறுதிப்பயணம் இன்று மதியம் 2 மணியளவில் தொடங்கியது. பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில், லட்சக்கணக்கான பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.  பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் சுமார் 4 கி.மீ தூரத்திற்கு இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்றனர். 

இதைதொடர்ந்து சரியாக 3.50 மணியளவில் தகனம் செய்யப்படவுள்ள ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்திற்கு அவரது உடல் வந்தடைந்தது. வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த், துணைக்குடியரசுத்தலைவர்  வெங்கையா நாயுடு, அமித் ஷா, மத்திய பா.ஜ.க அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும்,  பூடான் மன்னர், பாகிஸ்தான் சட்ட அமைச்சர், சார்க் மாநாட்டின் தலைவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டனர். 

பின்னர் வாஜ்பாயின் உடலுக்கு குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பூடான் மன்னர் உள்ளிட்ட வெளிநாட்டுத்தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து முப்படை வீரர்கள் மரியாதை செலுத்திய நிலையில் வாஜ்பாயின் உடலில் போர்த்தியிருந்த தேசியக்கொடி அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து, குடும்பத்தினர் தங்களது குடும்ப வழக்கப்படி மரியாதை செலுத்திய பின்னர் உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக, வேத மந்திரங்கள் ஓத, அரசு மரியாதைப்படி, 21 ராணுவ குண்டுகள் முழங்க மாலை 4.55 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா வாஜ்பாயின் உடலுக்கு எரியூட்டினார். 

newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.