கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக கேரளாவுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கி பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். அத்துடன் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அவர்களுக்கு உணவு, உடை, இதர பொருட்கள், நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு திருவனந்தபுரம் வந்த நிலையில், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோரும் சென்று பார்வையிட்டனர். முதல்வர், ஆளுநர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், இடைக்கால நிதியுதவியாக கேரளாவுக்கு ரூ.500 கோடி அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். தேசிய பேரிடர் நிவாரண உதவியில் இருந்து இது வழங்கப்படுகிறது. முன்னதாக கேரளாவில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரளாவுக்கு ரூ.100 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் நிவாரண நிதியாக பிரதமரிடம் ரூ.2,000 கோடி கேட்டு, ரூ.500 கோடி ஒதுக்கியது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
newstm.in