ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை இன்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2006ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் பங்கும் இருக்கிறது என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை, கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 1ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில வாரங்களுக்கு முன்பாக டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில், ப.சிதம்பரம் உள்ளிட்ட 17 பேர் மீது சி.பி.ஐ, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது என நேற்று செய்தி வெளியானது. அமலாக்கத்துறை இயக்குநர் கர்னல் சிங்கின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதையொட்டி, அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி அமலாக்கத்துறை இன்று டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்திற்கு எதிராக துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் ப.சிதம்பரம் தவிர அவரது கணக்குப்பதிவாளர் உள்ளிட்ட 8 பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை வருகிற நவம்பர் 26ம் தேதி நடைபெற உள்ளது.
newstm.in