இந்த நாளை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 03:25 pm
pm-modi-speech-on-inauguration-of-statue-of-unity

இந்தியாவின் இரும்பு மனிதர் படேலுக்கு உலகின் மிக உயரமான  சிலை திறக்கப்பட்ட இந்நாளை இந்திய வரலாற்றிலிருந்து அழிக்க முடியாது என சிலையை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். 

கடந்த 2010ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தபோது நர்மதை நதிக்கரையிலுள்ள சர்தார் சரோவர் அணை அருகே, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர்களில் ஒருவருமாகிய, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமாக பதவி வகித்த சர்தார் வல்லபாய் படேலுக்கு மிகப் பெரிய சிலை அமைக்கப்படும் என நரேந்திர மோடி அறிவித்தார்.

அதன்படி, சிலை அமைப்பதற்கான அடிக்கல் விழா கடந்த 2013ம் ஆண்டு அடிக்கல் நடத்தப்பட்டது. சுமார் ரூ.3,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் இந்தப் பிரமாண்ட சிலை அவரின் 143வது பிறந்த தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து  வைக்கப்பட்டுள்ளது.  

இது உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. 787 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பீடத்தின் உயரம் மட்டுமே 190 அடியில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இந்தியாவின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் இருந்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களால் அனுப்பிவைக்கப்பட்ட இரும்பு துண்டுகள், 22,500 டன், சிமெண்ட், 18,500 டன் மற்றும் சிலை அமைக்கத் தேவையான இரும்பு கம்பிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்,  சிலையின் வெளிப்புறத்தில் அதன் அங்கியாக 18,50,000 கிலோ எடையுள்ள வெண்கலத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 6.5 ரிக்டர் அளவு நில அதிர்வையும், மணிக்கு 180 கிமீ வேகத்தில் வீசும் காற்றையும்  எதிர்த்து தாங்கி நிற்கக் கூடிய வகையில் திட்டமிட்டு இச்சிலை அமைக்கப்பட்டுள்லது.

இன்று காலை நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேல் சிலைத் திறப்பு விழாவில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர். 

படேலின் சிலைக்கு நடைபெற்ற திறப்பு விழாவிற்கு பின்னர், உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,  "இன்றைய தினம் நம் தேசத்தின் வரலாற்றில் பதியப்பட்டுள்ள மிக முக்கியமான தினமாகும். இந்த தினத்தை நம் தேசத்தின் சரித்திரத்திலிருந்து அழிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இன்றைய நிகழ்வு நம் தேசத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஓர் வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த எழுச்சியூட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.

நம் தேசம் இன்று ஒரே தேசமாக இன்று அமைந்திருப்பதற்கு சர்தார் படேல் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்பது ஓர் வரலாற்று உண்மையாகும். மேற்கே ராஜஸ்தான் மாநிலத்தின் கட்ச் பகுதியில் இருந்து கிழக்கே நாகலாந்து மாநிலத்தின் கோஹிமா வரையும், அதேபோன்று வடக்கே காஷ்மீரிலிருந்து, தெற்கே கன்னியாகுமரி வரை இந்தியா ஒருங்கிணைந்து இருப்பதற்கு படேல் மட்டுமே காரணியாக இருந்தார் என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 

பிரிட்டீஷ்காரர்கள் இந்த நாட்டை விட்டுச் செல்லும்போது 566 பகுதிகளாக துண்டாடிய பின்னரே சுதந்திரம் வழங்கிச் சென்றனர். சிதைக்கப்பட்ட இத்தேசத்தை உறுதியுடன் தனியொரு தலைவனாக  உறுதியுடன் நின்று ஒருங்கிணைத்த மாபெரும் வெற்றி மனிதராக படேல் திகழ்ந்தார். படேல் மட்டும் உள்துறை அமைச்சராக இல்லாது போயிருந்தால் இன்றைய ஒருங்கிணைந்த இந்தியா அமைந்திருக்க இயலாது. இதன் காரணமாகவே இந்தியாவின் இரும்பு மனிதர் படேல் என அவர் அழைக்கப்படுகிறார்.

இந்தியாவின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. படேல் இல்லாவிட்டால், குஜராத்தின் கிர் பூங்கா, சோம்நாத் கோவில், ஹைதராபாத் சார்மினார் ஆகிய இடங்களுக்கு செல்லக் கூட விசா எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

அவர் காட்டிய உறுதியான, பலம் நிறைந்த வழிகாட்டுதல்களை முன்னெடுத்தும் செல்லும் நாடாக தற்போது நாம் திகழ்ந்து வருகிறோம்.  அவர் கூறியபடியே, பலம் வாயந்த தேசம் என்ற நிலையை தற்போது நாம் எய்துவிட்டோம்.

அவர் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிச் சென்ற "பலம் நிறைந்த நிலையில் மட்டுமே, பிற நாடுகளுடன் உரையாடல்களை நடத்துவோம்" என்ற கொள்கை இலக்கை தற்போது அடைந்து விட்டோம். 

பிற நாடுகளுடனான உறவை, நாம் விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்டையிலேயே தற்போது நிர்வகித்து வருகிறோம். அதற்கு முழுக்க முழுக்க படேல் நமக்கு வழங்கிய வழிகாட்டுதல்களே அச்சாரமாக அமைந்துள்ளது என்பதை நான் இன்று பதிவு செய்ய விரும்புகிறேன்.

அத்தகைய பெருமை வாய்ந்த சர்தார் வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை,  என் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியமாகவும், அரிதாகவும் நான் கருதுகிறேன். படேல் பிறந்த பூமியில் பிறந்தவன், இந்த நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்றே மற்றவர்கள் என்னை அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 

 நான் முதல்வராக இருந்தபோது படேலுக்கான சிலை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இருந்தபோதிலும் இந்த தேசத்தின் பிரதமராக பதவியேற்று இச்சிலையை நானே திறந்து வைப்பேன் என்பதை அன்று நான் எதிர்பார்க்கவில்லை. 

உலகிலேயே மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டதன் மூலம் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன். நம் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளும் ஏனையோரும் இச்சிலையை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்

இந்தச் சிலை உருவாக்கக் காரணமாக இருந்தவர்கள், இதை உருவாக்கியவர்கள் என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என சர்தார் வல்லபாய் படேலின் சிலையை திறந்துவைத்த பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close