'ஒற்றுமைக்கான சிலை' மொழிப்பெயர்ப்பு பலகையே பொய்: அதிகாரி தகவல்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 11:48 am
signboard-with-wrong-tamil-translation-of-statue-of-unity-is-fake-officials

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே  ‘STATUE OF UNITY’ என்பதை தமிழில் தவறாக மொழிப்பெயர்த்து இருப்பதாக வைரலாகும் புகைப்படம் போலியானது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

பாரதத்தின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும், முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. படேலை போற்றும் வகையில் குஜராத் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு அருகில் உலகின் மிக உயரமான சிலையை மத்திய அரசு அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  

‘STATUE OF UNITY’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. இந்த சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் STATUE OF UNITY என்பதை ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’  என தமிழில் தவறாக மொழிப்பெயர்த்து உள்ளதாக புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகின. ரூ.3000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலைக்கு அருகே தமிழ் மொழியை அவமானப்படுத்தி உள்ளனர் என்று பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் வைரலான புகைப்படத்தில் இருக்கும் பெயர் பலகை போலியானது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து சர்தார் சரோவர் நர்மதா கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறும் போது, "தமிழ்  மொழியில் ‘STATUE OF UNITY’ என்பது தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டு விட்டதாக பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை. உண்மையான பெயர் பலகையில் அச்சிலையின் சின்னம் மற்றும் இந்திய அரசின் திட்டம் என்ற வாசகம் மட்டுமே இருக்கும். 

வெளிநாட்டு மொழிகளில் மொழிப்பெயர்த்து பெயர் பலகை வைக்கும் எண்ணம் முன்பும் இல்லை, இனியும் இல்லை. ரஷ்யா மற்றும் ஐரோப்பாவில் இருந்து சுற்றுலா பயணிகளை அரசு எதிர்ப்பார்க்கவில்லை. அப்படி ஒரு பலகை இருந்தால் அது இந்திய மொழிகளில் தான் இருந்திருக்கும்" என்றார். 

நேற்று நடந்த பிரமாண்ட சிலை திறப்பு நிகழ்வை கொச்சைப்படுத்தவே திட்டமிட்டு இந்த புகைப்படங்கள் பரப்பப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close