காஷ்மீரில் பா.ஜ.க. செயலாளர் சுட்டுக் கொலை - பதற்றம் நீடிப்பதால் ராணுவம் குவிப்பு

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 09:30 am
bjp-secretary-shot-dead-in-kashmir-curfew-imposed

ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க. செயலாளர் அனில் பரிஹார், அவரது மூத்த சகோதரர் அஜீத் பரிஹார் ஆகிய இருவரையும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்றிரவு சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவராக அனில் பரிஹார் இருந்திருக்கிறார். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டவர். முஸ்லிம் மக்களிடமும் ஆதரவு பெறும் அளவுக்கு, மிக அமைதியான தலைவர் என்று சொல்லப்படும் அனில் பரிஹாருக்கு ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்துள்ளது. இதனால், அவருக்கு தனிக்காவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும், நேற்றிரவு தங்களுடைய கடையை அடைத்துவிட்டு அனில் பரிஹாரும், அஜீத் பரிஹாரும் வீடு திரும்பியபோது, தனிக்காவலர்கள் உடன் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த சந்தர்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இந்தக் கொலையைத் தொடர்ந்து அனில் பரிஹாரின் ஆதரவாளர்கள், மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினருடன் கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், கிஷ்த்வார் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கதுவா, ராம்பன், பூஞ்ச், ரஜௌரி உள்ளிட்ட மாவட்டங்களில் 4 நபர்களுக்கு மேல் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பீதி பரவுவதை தடுக்கும் வகையில் செனாப் பள்ளத்தாக்கு பகுதிக்கு உள்பட்ட அனைத்து இடங்களிலும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலை பி.டி.பி., என்.சி.பி. இரண்டு பிரதான கட்சிகள் புறக்கணித்த நிலையில், பா.ஜ.க. தேர்தலில் போட்டியிட்டு பெருவாரியாக வெற்றி பெற்றது. அதன் காரணமாக தீவிரவாதிகள் இக்கொலையை நடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close