மகாராஷ்டிரா: அவ்னி புலி சுட்டுக்கொலை, குட்டிகளை தேடும் வனத்துறை

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 09:12 am
tigress-avni-shot-dead-in-maharashtra

மகாராஷ்டிர மாநிலத்தில் 13 பேரை தாக்கி கொன்றதாக கூறப்படும் அவ்னி புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். 

கடந்த 2 வருடங்களாக யவத்மால் பகுதியில் உள்ள மக்களை ஒவ்வொரு நிமிடமும் உயிர் பயத்துடன் வைத்திருந்தது ‘அவ்னி’ எனும் பெண் புலி. கடந்த ஜூன் 2016ம் ஆண்டில் இருந்து, அவ்னி புலி அடித்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மக்கள் வெளியே நடமாடவே முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். 

இத்தனைக்கும் காரணமான ‘அவ்னி’ புலியை பிடிப்பது வனத்துறையினருக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில், கடந்த செப்டம்பர் 4ம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவ்னி புலியை கண்டதும் சுட உத்தரவிட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா வனத்துறையினரின் தேடுதல் வேட்டையின் பலனாக, நவம்பர் 2ம் தேதி இரவு 11 மணியளவில், போரதி எனும் கிராமத்தின் அருகே அவ்னி புலி சுட்டுக் கொல்லப்பட்டது. பிரபல துப்பாக்கிச் சுடும் வீரரான ஷஃபத் அலி கானின் மகன் அஸ்கர் அலி கான், இந்த புலியை சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்ட அவ்னிக்கு பிறந்து 10 மாதமேயான 2 குட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஏ.கே.மிஸ்ரா கூறுகையில், “குறிபார்த்து சுடுபவர்கள் கடந்த சில நாட்களாகவே அவ்னியைத் தீவிரமாக தேடி வந்தனர். கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில், நேற்று பகல் முழுவதும், போரதி கிராமத்தின் சாலைக்கு அருகே, அவ்னி புலி சுற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அஸ்கருடன் வனத்துறையினர் அந்த இடத்தைச் சுற்றி முகாமிட்டனர். அப்போது இரவு 11 மணியளவில், அந்த சாலையின் 149வது கம்பார்ட்மென்ட் அருகே, புலியை வீரர்கள் சுற்றி வளைத்தனர். ஆனால், எங்களைக் கண்டதும், புலி தாக்க முயன்றது. அப்போது அஸ்கர் அதனை நோக்கி ஒரேயொரு குண்டை மட்டும் செலுத்தினார். தற்காப்புக்காக அவர் சுட்டதில் புலி இறந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார். வனத்துறையினர் தற்போது அதன் குட்டிகளை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close