கடன் மோசடி வழக்கு - மெஹுல் சோக்ஸிக்கு நெருக்கமானவர் கைது

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 12:09 pm
mekul-chokshi-s-associate-arrested-in-kolkata

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், தேடப்படும் நபரான மெஹுல் சோக்ஸிக்கு நெருக்கமானவரும், அவரது போலி நிறுவனத்தின் இயக்குநருமான தீபக் குல்கர்னியை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கொல்கத்தா விமான நிலையத்தில் கைது செய்தனர்.

ஹாங்காங்கில் சோக்ஸி நடத்தி வந்த போலி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் தீபக் குல்கர்னி. சோக்ஸியின் கடன் மோசடி தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை திட்டமிட்டது. அதன்படி, தீபக் குல்கர்னி தேடப்படும் குற்றவாளி என்று சர்வதேச அளவிலான நோட்டீஸ் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து இன்று கொல்கத்தா விமான நிலையம் வந்திறங்கிய குல்கர்னியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் சோக்ஸி, இந்தியா திரும்பாத பட்சத்தில், அவரை தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், தன் மீது வழக்குப்பதிவு செய்யும் முன்பே வெளிநாடு சென்றுவிட்டதாகவும், உடல்நிலை பாதிப்பு காரணமாகவே இந்தியாவுக்கு திரும்ப இயலவில்லை என்றும் சோக்ஸி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், நகை வணிக அதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் ரூ.13,000 கோடி அளவுக்கு முறைகேடான வழிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close