சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது!

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 03:18 pm
sabarimala-temple-closes-again-amid-protests

இரண்டு நாட்களாக திறக்கப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பூஜைகளுக்கு பின்னர் நேற்று இரவு நடை சாத்தப்பட்டது. மீண்டும் வரும் 17ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது.

கேரளாவில் சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததற்கு சமூக ஆர்வலர்கள் பலர் ஆதரவு தெரிவித்தாலும் கேரள மக்களே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டமும் நடத்தின. 

இந்த சூழ்நிலையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் பாலராம வர்மாவின் பிறந்த நாளையொட்டி, நேற்று முன்தினம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனால் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 


இரண்டு நாட்கள் கோவில் திறக்கப்பட்ட நிலையில் கடந்த முறை போல் போராட்டம் நடைபெறாமல் இருக்க, இந்த முறை கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், 50 வயதுக்குட்பட்ட பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற நோக்கில், போராட்ட அமைப்பினர் மற்றும் பக்தர்கள் கோவிலை சுற்றி வளைத்தனர். இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேலே போலீசாரால் கூட போக முடியவில்லை. 

நேற்று, ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பினர். இந்த மோதலில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காயமுற்றார். இதனால் அப்பகுதியில் நேற்று பதற்றம் ஏற்பட்டது. 

பின்னர் நேற்று நடை சாத்தப்படுவதையொட்டி, மாலை ஐயப்பனுக்கு படிபூஜை நடத்தப்பட்டது. பின்னர் அரிவராசனம் பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனை மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். அடுத்ததாக வரும் 17ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close