ஆனந்த் குமார் மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் - தேசிய துக்க தினம் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 08:57 am
national-mourning-for-minister-pm-modi-express-grief

மத்திய அமைச்சர் ஆனந்த் குமாரின் மறைவுக்கு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “மிக மூத்த நாடாளுமன்றவாதியும், அமைச்சருமான ஆனந்த் குமார் மறைந்த செய்தியறிந்து வருத்தமடைந்தேன். நாட்டின் பொதுவாழ்வுக்கும், கர்நாடக மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு இது. அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் குமாருக்கு உடல்நிலை சரியில்லை என்று ஏற்கனவே தெரியும் என்றாலும், அவர் அதில் இருந்து மீண்டு வந்து பணிகளை தொடருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த திடீர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆனந்த் குமார் பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை வகித்த நல்ல நிர்வாகஸ்தர். பா.ஜ.க.வின் மிகப்பெரும் சொத்து அவர். கர்நாடகவில் கட்சியை வலுப்படுத்த மிகக் கடுமையாக உழைத்தவர் ஆனந்த் குமார். குறிப்பாக, பெங்களூருவிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தியவர். தொகுதி மக்கள் எளிதில் நெருங்கக் கூடிய அளவில் இருந்தவர்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆனந்த் குமாரின் மறைவையொட்டி இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்றும், நாடெங்கிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close