முதல் தேசிய நீர்வழிச்சாலை துறைமுகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 05:48 am
modi-inaugurates-india-s-first-waterways-terminal

தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய நீர்வழிச்சாலை வழியாக வந்த இந்தியாவின் முதல் உள்நாட்டு சரக்கு கப்பல் எம்.வி ரவீந்திரநாத் தாகூரை வரவேற்றார்.

1986ஆம் ஆண்டு கங்கை, பாகிரதி, ஹூக்லி நதிகளை இணைத்து, ஹால்டியா முதல் அலகாபாத் வரை தேசிய நீர்வழிச் சாலை மேம்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின் இந்திய உள்நாட்டு நீர்வழிச்சாலை ஆணையம், உள்நாட்டு துறைமுகங்கள் உருவாக்குவது, நீர்வழிச் சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வந்தது. 

தற்போது 'ஜல் மார்க் விகாஸ்' திட்டத்தின்படி ஹால்டியா முதல் வாரணாசி வரை சுமார் 1,390 கிலோமீட்டர் தூரம் வரையிலான நீர்வழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் 1,500 முதல் 2,000 டன் எடை கொண்ட சரக்கு கப்பல்கள் செல்ல முடியும். உலக வங்கியிடம் இருந்து கிடைத்த 5,369 கோடி ரூபாய் நிதியின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சாலை வழியாக செல்லும் முதல் சரக்கு கப்பல் எம்.வி ரவீந்திரநாத் தாகூர், கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு வாரணாசி வந்தது. பெப்சிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 16 கண்டெய்னர்களை இந்த சரக்கு கப்பல் கொண்டு வந்தது. இஃப்கோ நிறுவனத்துக்கு சொந்தமான உரங்களை திருப்பி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. வாரணாசியில் முதல் உள்நாட்டு துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, எம்.வி ரவீந்திரநாத் தாகூரை வரவேற்றார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கப்பல்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

இந்த திட்டத்தின்படி, 3 துறைமுகங்கள், வாரணாசி, சாஹிப்கஞ் மற்றும் ஹால்டியா பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. இந்த நீர்வழிச்சாலையால், கொல்கத்தாவிலிருந்து வாரணாசிக்கு சரக்கு கப்பல் வந்துசேர 13 நாட்கள் ஆகுமாம். இதனால் சரக்கு பரிமாற்றத்திற்காக ஆகும் செலவு குறைவதோடு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுபடும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close