அமெரிக்க பொருளாதார தடைக்கு மத்தியிலும் வர்த்தகம் செய்வது எப்படி? இந்தியா - ஈரான் ஆலோசனை

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2018 10:12 am
india-iran-discussed-trade-co-operation-amid-us-sanctions

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ள போதிலும், அந்நாட்டுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இந்தப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்று முடிந்தது.

அணு ஆயுத தடைக்கான விதிகளை ஈரான் மீறிவிட்டதாக பல்வேறு தடைகளை அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி, உணவுப் பொருள்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் இறக்குமதி உள்ளிட்ட துறைகளில் பொருளாதார தடையில் இருந்து ஈரானுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில் ஈரானும், இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

ஈரானுக்கான இந்திய தூதர் சௌரப குமார் மற்றும் டெஹ்ரான் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவ்வர் மௌசத் கன்சாரி ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.  அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரான் - இந்தியா இடையே வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்று மௌசத் கன்சாரி தெரிவித்தார். குறிப்பாக, வங்கி மற்றும் நிதித்துறையில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

அமெரிக்க பொருளாதார தடையில் இருந்து, சாபஹார் துறைமுகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அந்த துறைமுகத்தை இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கன்சாரி கூறினார்.

இந்தியத் தூதர் சௌரப குமார் பேசுகையில், இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய 1,000 பொருள்களை பட்டியலிட்டார். வெளிநாட்டு கரன்சிகளுக்குப் பதிலாக, இரு நாடுகளின் கரன்சியை வைத்தே வர்த்தகம் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றும், இந்திய ரூபாய்களை, தங்களுக்கான தேவைகளை ஈரான் இறக்குமதி செய்கையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதிவிலக்கு அளித்துள்ளதன்படி, ஈரான் நாட்டிடம் இருந்து அடுத்த 6 மாதங்களில் நாளொன்றுக்கு 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான தொகை இந்திய வங்கிகள் மூலமாக ரூபாயில் செலுத்தப்படும் என்றும் சௌரப குமார் தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close