இரு தினங்களுக்கு முன் காஷ்மீரில் ஒரு இளைஞரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்த நிலையில், 19 வயதேயான மற்றொரு இளைஞர் சோபியான் பகுதியில் நேற்று கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த நதீம் என்ற இளைஞரை தீவிரவாதிகள் இரு தினங்களுக்கு முன் கடத்திச் சென்றனர். ராணுவத்தின் உளவாளியாக இருப்பார் என்று சந்தேகத்தின் பேரில், தீவிரவாதிகளை அவரை கைது செய்ததாக தெரிகிறது. அதன் பின் அவரை கொலை செய்த தீவிரவாதிகள், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அவரது உடலை நிக்லோரா என்ற பகுதியில் வீசிச் சென்றனர்.
இந்த நிலையில், சோபியான் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் ஹுசெயிப் அஷ்ரப், தீவிரவாதிகளால் நேற்று கடத்திச் செல்லப்பட்டார். அவரது உடல் சில மணி நேரங்களுக்கு பிறகு கழுத்தறுபட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடற்கூறாய்வுக்கு பிறகு, அஷ்ரபின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் நடையெப்ற்று வரும் நிலையில், இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in