சத்தீஸ்கர் தேர்தல் - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2018 09:32 am
chattisgarh-assembly-elections-second-phase-polling-started

சத்தீஸ்கரில் 90 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு, இரண்டாம் கட்டமாக 72 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக 18 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 11ம் தேதி அறிவிக்கப்படும்.

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 72 தொகுதிகளில் மொத்தம் 1,079 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில், 77.53 லட்சம் ஆண் வாக்காளர்கள், 76.46 லட்சம் பெண் வாக்காளர்கள், 877 திருநங்கை என மொத்தம் 1.54 கோடி பேர் இன்று வாக்களிக்கின்றனர். மொத்தம் 19,336 வாக்குச்சாவடிகளில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டும் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது.

தேர்தலையொட்டி ஒரு லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, கரியாபந்த், பலராம்பூர், மஹஸமுந்த் உள்பட மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் நிறைந்த 6 மாவட்டங்களில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க.  மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகி தலைமையிலான சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி மூன்றாவது அணியாக களமிறங்கியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close