ஊழல் மட்டுமே காங்கிரசின் வாழ்வியல்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு!

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 01:52 pm
corruption-is-congress-lifestyle-pm

காங்கிரஸ் கட்சியின் வாழ்வியலே ஊழல் தான் என்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கான சட்டசபைக்கான  தேர்தல் 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் இந்த மாநிலம் நிறைய வளர்ச்சிகளை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்துள்ளது. இதனை எந்த ராஜாவும், மகாராஜாவும் செய்யவில்லை. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தான் செய்துள்ளார். 

15 ஆண்டுகளுக்கு முன்னர் யோசித்து பாருங்கள். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அந்த காலத்தில் மத்திய பிரதேசத்தின் நிலை எப்படி இருந்தது என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் இந்த மாநிலத்தின் மக்களிடம் எதிர்மறையான அரசியல் செய்யும் காங்கிரசை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறி வருகிறேன். காங்கிரஸ் கட்சியினரை மீண்டும் ஆட்சிக்கு வர நீங்கள் அனுமதிக்கக் கூடாது. 

 பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நீங்களும் உங்கள் பெற்றோரும் செய்த தவறு காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்கத் தேர்வு செய்தது. தற்போது உங்கள் குழந்தைகளின் நலனைக் காத்திட வேண்டுமானால் அந்தத் தவறை மீண்டும் செய்து விடாதீர்கள். 

விவசாயிகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க பல முயற்சிகளை இந்த அரசு செய்து வருகிறது. இந்திய மக்கள் தான் எங்களுக்கு முக்கியம். அவர்களுக்காக சேவை செய்வதையும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதையும் தான் எங்கள் முதல் நோக்கமாக பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இது ரிமோட் கன்ட்ரோலால் கட்டுப்படுத்தப்படும் அரசு இல்லை. இந்த அரசு மக்களாலும் இளைஞர்களாலும் நடத்தப்பட்டு வருகிறது. நான் நாட்டு மக்களுக்கும், நாட்டின் இளைஞர்களுக்கும் சேவை செய்து வருகிறேன். 

கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் செய்தவற்றை எல்லாம் கூற அந்த கட்சி முன்வரவில்லை. அவற்றை எல்லாம் குறித்து பேசக் கூட அந்த கட்சித் தலைவர்கள் தயாராக இல்லை. அவர்களின் 40 ஆண்டுகாலத்தையும் இந்த 4 ஆண்டுகால ஆட்சியை மட்டுமே ஒப்பிட்டு பாருங்கள்.  வித்தியாசத்தை நாம் அனைவரும் தெளிவாக உணர முடியும்.

அந்த கட்சியால் மோடியை எதிர்த்து நிற்க முடியவில்லை, எனவே தற்போது மோடியின் தாய் குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்.  காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் இத்தனை ஆண்டுகால ஆட்சியையும், அவர்கள் மேற்கொண்ட பணிகளையும் உற்றுநோக்கினால் ஊழல் செய்து பணம் ஈட்டுவது மட்டுமே அந்த கட்சியின் வாழ்வியல் என்பது நமக்குத் தெரிய வரும். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க கடுமையான சட்டத்தை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்  அவர்களின் பினாமிகள் நடத்திவரும் பல நிறுவனங்களும் இதில் சிக்கி உள்ளன. 

குழந்தைகளுக்கு கல்வி, விவசாயிகளுக்கு நீர் பாசனம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டே பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது" என இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close