கண்ணியம் பேசும் கனவான்கள்!             

  பாரதி பித்தன்   | Last Modified : 24 Nov, 2018 05:18 pm
congress-vs-bjp

பாஜக 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அந்த கட்சியினர் கூட எதிர்பார்க்காத வெற்றி பெற்றது. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து பின்னர் அதனை இழந்த காங்கிரஸ் கட்சியில் சிலர் கட்சியை வளர்ப்பதைவிட பாஜகவை விமர்சனம் செய்வதில் தான் தங்களின் அரசியல் முகவரியை தக்கவைத்துக் கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையும் உதவி செய்கிறது. இவர்களில் முன்னாள் அமைச்சர்கள் சசி தரூர், திக்விஜய் சிங், ப.சிதம்பரம் ஆகியோர் முக்கியமானவர்கள். இதில் முன்னவர் 2 பேரும் வாய்க்கு வந்தபடி பேசுவதில் வல்லவர்கள். அவர்கள் பேசுவதற்கு அரசியல் மட்டும் தான் காரணமா என்று கேள்வி எழுப்பினால் ஆம் என்று சொல்வதற்கு தைரியம் வரவில்லை.

கொலை சம்பவங்கள் சிலவற்றில் குற்றவாளியே இறந்தவர் உடல் மீது விழுந்து அழுவது, இறுதி சடங்கு வரை ஒத்துழைப்பு தருவது போன்ற நாடகத்தை அரங்கேற்றி யோக்கியர் போல காட்டிக் கொள்வார். இதற்கு இணையாகத்தான் மக்கள் நலனுக்காக பேசுவது போல இவர்கள் உரக்க கூவினாலும், உள்ளூக்குள் இருப்பது என்னவோ அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் தான். அது வெளியே தெரியக்கூடாது என்று தான் இவர்கள் மோடி அரசு மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள்.

கேரளாவை சேர்ந்த சசி தரூர் 2014ம் ஆண்டு .மோடி ஆட்சியை பற்றி பாஜக கட்சியினரை விட அதிகம் பாராட்டினார். .மோடியுடன் நெருக்கம் காட்ட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்தார். இது காங்கிஸ் கட்சியிலேயே விமர்சனமானது. துாய்மை இந்தியா திட்டத்தை அக். 2 ம்தேதி பிரதமர் மோடி தொடங்கிய 20 நாளில் திருவனந்தபுரம் கடற்கரையை துாய்மை செய்தார் சசிதரூர். இவர் அரசுக்கு அடித்த ஜால்ரா சத்தம் பொறுக்காத காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியபோது, தான் .மோடியை ஆதரிக்கவில்லை. மத்திய அரசை தான் ஆதரிக்கிறேன் என்றார். ஆனால் அதில் உண்மை இல்லை.

சசிதரூர் அமைச்சராக இருந்த போதே பிரச்னை தொடங்கிவிட்டது. ஆண்டு 2010 ம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் ஏலத்தில் வாங்கியது. இதில் 70 கோடி மதிப்புள்ள 18 சதவீத பங்குகள் சுனந்தாபுஷ்கர் என்ற சசிதரூரின் 3வது மனைவிக்கு இலவசமாக கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு சசிதரூர் உதவியதாகவும், கொச்சி அணியை வாங்கிய ரெண்டஸ்வஸ் நிறுவன பங்குதாரர்கள் குறித்த விபரங்களை வெளியிட வேண்டாம் என்று மிரட்டியதாவும்  ஐபிஎல் அப்போதைய தலைவர் லலித் மோடி குற்றம்சாட்டினார்.

இதற்காக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த .சசிதரூர் பதவிவிலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.இந்த சூழ்நிலையில் சசிதரூர் மிகுந்த சர்ச்சைக்குள்ளானார்.

பின்னர் இவரது 3 வது மனைவி  சுனந்தாபுஷ்கர் 17–01–2014 அன்று மர்மமான முறையில் இறந்தார். சசிதரூர் மீது விழுந்த சந்தேக நிழல் இன்று வரை விலகாமல் உள்ளது.

இந்த சூழ்நிலையில் உள்ள இவர்தான் வாய்க்கு வந்தபடியெல்லாமல் மோடியை, அவர் அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

அடுத்தது திக்விஜய்சிங். மத்திய பிரதேச அரசியல்வாதி. தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். மற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் பிரச்னை இருக்கும் நிலையில், இவருக்கு பிரச்னையே வாழ்க்கையாக உள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு திக்விஜய் சிங் மனைவி ஆஷா புற்றுநோய் பாதிப்பால் இறந்தார். 67 வயதான திக்விஜய் சிங் தன் மனைவியை இழந்த ஒரே ஆண்டில் டிவி செய்தி தொகுப்பாளர் அம்ரிதா ராயை காதலிப்பதாக கூறி அதிர்வு அலைகளை ஏற்படுத்தினார். அம்ரிதா ராய்க்கு திக்விஜய்சிங் மூத்தமகள் வயதுதான்(47)

மத்திய பிரதேசத்தில் தொழில்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள், அரசு பணிகளுக்கான ..தேர்வுகளை அந்த மாநில தொழில்கல்வி தேர்வு வாரியம்(வியாபம்) நடத்தி வருகிறது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2016ம் ஆண்டு இந்த முறைகேட்டை விசாரிக்க சிபிஐ உத்தரவிட்டது. அவ்வாறு விசாரித்து காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங், கமல்நாத், ஆர்டிஐ ஆர்வலர் பிரசாந்த் பாண்டே ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய பிரதேச சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தான் வாயில் வந்ததை எல்லாம் திக்விஜய் சிங் பேசி வருகிறார்.

கடந்த அக்டோபர் மாதம் திக்விஜய் சிங் உபி மாநிலத்தில் ஆம்புலன்ஸ்கள் செயலற்று நிற்பதாக  சமூக ஊடங்களில் படம் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த படம் எடுத்த இடம்  விஜயவாடா என்று தெலுங்கு தொலைக்காட்சி சக்தி டிவி உண்மையை வெளிப்படுத்தியது.

காந்தி கொலைக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் தொடர்பு இல்லை என நீதிமன்றமே தீர்ப்பு கூறிய பின்னர்., காங்கிரஸ் தலைவர்கள் அதையே திரும்ப திரும்ப கூறி வருகினறனர். சமீபத்தில் திக்விஜய்சிங் காந்தியை கொன்றவர்கள் தான் கர்கேரேயை கொன்றவர்களும் என்று விமர்சனம் செய்து சங்கப்பரிவாரிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.

இந்தநிலையில் நகர்புற நக்சல்களிடம்  திக்விஜய் சிங்கின்  தொலைபேசி எண்கள் இருப்பதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

தான் பொதுக்கூட்டங்களில் பேசினால் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு விழாது என்று திக்விஜய்சிங் கூறியதே அவர் எப்படிபட்டவர் என்பதற்கு சாட்சி.

ராஜீவ்காந்தி காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில்  ஒருவராக விளங்குபவர் ப.சிதம்பரம். அவர் இல்லாத காங்கிரஸ் அரசு கையிழந்த அரசாகத்தான் கருதப்படும். இதனால் தான் அவர் நேரடியாக மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றிபெற்றாலும், தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நாட்டின் எந்த மூலையிலாவது எம்பியாக தேர்வு செய்யப்படுவார். காங்கிரஸ் ஆட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி  எந்த வகையாக இருந்தாலும் சிதம்பரத்திற்கு அமைச்சர் பதவி நிச்சயம்.

அப்படிப்படவர் தான் 2001 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்று தனியே கட்சி தொடங்கி மீண்டும் 2004ம் ஆண்டு அதை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். 2009ம் ஆண்டு  லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில்  சிதம்பரம் 3,354 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்ப்பட்டார். அவர் பெற்றவெற்றி சர்ச்சைக்குளானதாகவே உள்ளது. அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த வெற்றிக்கு முழுமுதல் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.

இவரும் கூட பாஜ அரசை விமர்சனம் செய்வதில் முன்னிலையில் உள்ளார். திக்விஜய்சிங், சசி தரூர் அளவிற்கு இல்லாவிட்டாலும் சிதம்பரத்தின் விமர்சனம் சற்றே துாக்கலாவே இருக்கிறது. அதை ஏற்க முடியாதற்கு அவர் மீது வெளிவரும் குற்றச்சாட்டுகள் தான் காரணம்.

மத்திய நிதிஅமைச்சராக சிதம்பரம் இருந்த காலகட்டத்தில் ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் அவர் மகன் கார்த்தி சிதம்பரத்தின் தலையிட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கில் பிஎம்எல்ஏ தீர்ப்பாயம் கார்த்தி சிதம்பரத்திற்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பாக கூறி இருக்கிறது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்க்க சிதம்பரம் முன்ஜாமீன் கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் 2ஜி வழக்கில் சிதம்பரத்தின் பெயரை  சேர்க்கச் சொல்லி சுப்பிரமணியசாமி நீதிமன்ற யுத்தமே நடத்தி உள்ளார். இதைத் தவிர சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர். வக்கீலாகவும் பணியாற்றுவது தார்மீக அடிப்படையில் தவறு என்றால் கூட அதைப் பற்றி கவலைப்படாமல் அப்பணியை டர்ந்து வருகிறார். அவர் மனைவியும் கூட பல தொழில் அதிபர்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வருகிறார். கணவன், மனைவி வழக்குகள் தொடர்பாக விவாதிக்கமாட்டார்கள் என்பதை நம்ப வேண்டும் என்பது நம் தலைவிதி.

இன்றைக்கு மக்கள் மத்தியில் மத்திய அரசை விமர்சனம் செய்யும் இது போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பல மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளன. மேலும் இவர்கள் தான் இது வரையில் இந்தியாவை ஆட்சி செய்தவர்கள். மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிப்பவர்கள். இவ்வாறு இவர்கள் துடிப்பது நம்மை காப்பாற்றவா என்பதை மட்டும் மக்கள் மனதில் கொண்டு வாக்களித்தால் மட்டும் போதும்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close