விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவிடாமல் மோடியை தடுப்பவர் யார் ? - ராகுல் கேள்வி

  கிரிதரன்   | Last Modified : 30 Nov, 2018 05:55 pm

ragul-meet-farmers-during-their-protest-at-delhi-on-monday

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவிடாமல், பிரதமர் மோடியை தடுப்பது யார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் ,ஆந்திரம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். ராம்லீலா மைதானத்தில்இரு்ந்து நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகளின் பிரம்மாண்ட  பேரணி நடைபெற்றது.

அப்போது விவசாயிகள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது:

மத்திய பாஜக அரசால் 15  தொழிலதிபர்களின் 3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியும்போது, கோடிக்கணக்கான விவசாயிகளின் கடனை மட்டும் ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை என தெரியவில்லை. விவசாயிகள் மோடி அரசிடம் இலவசங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர்களின் உரிமையைதான் கேட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவிடாமல் பிரதமர்  மோடியையும், மத்திய பாஜக அரசையும் தடுப்பது யார்?
எந்தவொரு தனிமனிதனும், கட்சியும் நாட்டை வழிநடத்த முடியாது.  விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தான் இந்த தேசத்தை வழி நடத்துகின்றனர். ஆனால் இவர்களை மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து அவமதித்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துணை நிற்கும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென்றால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும். என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசும்போது," நாடாளுமன்றத்துக்கு  உள்ளேயும், வெளியேயும்  விவசாயிகளின் பிரச்னைகளை நாங்கள் எழுப்பி கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகள் மற்றும் சாமானியர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதாகவே தெரியவில்லை. தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை விவசாயிகள் போராடிதான் ஆக வேண்டும். அவர்களுக்கு இடதுசாரிகள் பக்கபலமாக இருப்பார்கள்' எனக் கூறினார்.


டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசும்போது,  "பிரதமர் மோடி, தொழிலதிபர்களின் நலனை பேணுவதில் காட்டும்  அக்கறையில் 10 சதவீதத்தை விவசாயிகளின் மீது செலுத்தியிருந்தாலே இன்று அவர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டிருக்காது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், விவசாயிகளுக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், வரும் தேர்தலில் விவசாயிகள் பாஜகவை தூக்கி எறிந்துவிடுவர்' என எச்சரித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகௌடா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, , ஐ்க்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர்  விவசாயிகளின் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.