இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் தலையாய வழிகாட்டுதலால்தான், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளது சாத்தியமாகியுள்ளது என, சிபிஐ இயக்குநர் எம்.நாகேஸ்வர ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நாடு கடத்தப்பட்டார்.
'யுனிகார்ன்' என்ற பெயரிலான இந்த அதிரடி நடவடிக்கையை, சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் மேற்பார்வையில், சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையிலான குழு வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்கு நாடு கடத்துவது சாத்தியமே இல்லை எனக்கூறி வந்த சிலர், இன்று அவர் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கை முழுக்க முழுக்க, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வழிகாட்டுதலின்படியே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் தெரிவித்துள்ளார்.