ராஜஸ்தானில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், பாஜக வேட்பாளரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, பாலி மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, தேர்தல் அதிகாரி ஒருவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பாஜக வேட்பாளர் ஒருவரின் வீட்டுக்கு கொண்டு சென்றதற்கான வீடியோ ஆதாரம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்தது.
இதையடுத்து, அந்த அதிகாரி தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, குறிப்பிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பாலி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான மகாவீரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.