உலக பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 01:40 pm

india-overtakes-germany-to-become-the-7th-largest-in-the-world

ஒரு  நாட்டின் பங்குச் சந்தையை நாடிபிடித்துப் பார்த்தே அதன் பொருளாதார நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு பங்குச் சந்தை ஒரு தேசத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

தேர்தல், உள்நாட்டு கலவரங்கள் போன்ற அரசியல் சூழல்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற அரசின் பெரிய அளவிலான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பங்குச் சந்தை நிலவரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

இந்த வகையில், கடந்த காலங்களில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்துள்ள இந்திய பங்குச் சந்தை, தற்போது ஐரோப்பாவின் வளர்ந்த நாடான ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி, உலக பங்குச் சந்தை வர்த்தகத்தில் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஃபுளும்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கைபடி, கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக, ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி இந்தியா இந்த சாதனையைப் படைத்துள்ளது.

அமெரிக்கா , சீனாவுக்கு இடையேயான வர்த்தக போர், பிரிவினைவாதிகளுக்கும் , ஸ்பெயின் அரசுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், பிரிட்டனுக்கும் , இத்தாலிக்கும் இடையே நிலவும் பொருளாதார இணக்கமற்ற சூழல் போன்ற பல காரணிகள் உலக பொருளாதாரத்தில் இந்தியா விஸ்வரூபம் எடுக்க காரணிகளாக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டு தொழில்கள் கண்டுள்ள வளர்ச்சி முகமும், தொழில்முனைவோரை இந்திய அரசு ஊக்குவித்து வருவதும் இந்தியா இந்தச் சாதனையை படைத்துள்ளதற்கு முக்கிய காரணங்களாகும் எனவும் அந்த நிறுவனம் பாராட்டியுள்ளது.

உலகப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இந்தியா 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதன் மூலம், 2019 புத்தாண்டிலும் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3% ஆக இருக்கும். அதாவது ஜெர்மனியைவிட 4.5 மடங்கு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தை முதலீடுகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜெர்மனியின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 38 சதவீதம், ஏற்றுமதி பொருள்களின் மூலம் அதற்கு கிடைத்து வருகிறது. ஆனால், இந்தியாவின் ஜிடிபி-யில் 11 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி வர்த்தகத்தின் பங்காக உள்ளது. இருப்பினும், உள்நாட்டு நிறுவனங்களின் பங்குச்சந்தை முதலீடுகளின் மூலம் இந்தியா உலக பொருளாதாரத்தில் இந்த உயரத்தை எட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர  மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பயனாக, வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் விகிதம்  வெகுவாக குறைந்து வருகிறது என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதியாகிறது.

தற்போது, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 7-வது இடத்தை இந்தியா எட்டியுள்ளது என்ற செய்தி, மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெகுமானம் என்றே கருதத் தோன்றுகிறது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close