மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது...!

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 10:33 pm

lok-sabha-passes-triple-talaq-bill-house-adjourned

இஸ்லாமியர்கள் மத்தியில் வழக்கத்தில் இருந்து வந்த ஆண்கள் மூன்று முறை தலாக் எனக் கூறி அவரது மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில், எதிர்க்கட்சிகளின்  பலத்த எதிர்ப்புக்கிடையில் இன்று (வியாழக்கிழமை) மாலை ஆறு மணிக்குப் பிறகு நிறைவேறியது.

முஸ்லிம் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முத்தலாக் (விவாகரத்து) தடை மசோதாவை மத்திய அரசு கடந்த 17 -ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து, 20-க்கும்  மேற்பட்ட திருத்தங்களை செய்து, முத்தலாக் தடை மசோதாவை, இரண்டாவது முறையாக மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதன் மீது இன்று விவாதம் நடைபெற்றது. 

விவாதத்துக்கு பிறகு இம்மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விவாதத்தில் பேசும்போது, "அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், முத்தலாக் தடை மசோதா குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. எனவே, இதனை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்" என  வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, "20 இஸ்லாமிய நாடுகளிலேயே தடை செய்யப்பட்டுள்ள முத்தலாக் முறையை,  மதச்சர்பாற்ற நாடான இந்தியாவில் தடை செய்வதில் என்ன தவறு இருக்கிறதென தெரியவில்லை. பெண்களின் உரிமைக்காக கொண்டு வரப்படும் இந்த மசோதாவை தயவு செய்து யாரும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம்" என்றார்.

விவாதத்தின்போது நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தும் அரசு தரப்பில் ஏற்கப்பட்டது. இந்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என ஆளுங்கட்சித் தரப்பில் அவையில் வலியுறுத்தப்பட்டது. 

முத்தலாக் தடை தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டம் காலவாதியாக இன்னும் ஒன்றரை மாதங்களே இருந்த நிலையில்,  இன்று நடைபெற்ற நான்கு மணி நேர விவாதத்துக்குப் பிறகு எதிர்கட்சிகளின் வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ்  அதிமுக மற்றும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 11 வாக்குகள் வித்தியாசத்தில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா நிறைவேறியது.

முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவாக நடைபெற்ற வாக்கெடுப்பில் அவையிலிருந்து 256 பேரில் 245 பேர் ஆதரித்தும் 11 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.

நான்கு மணி நேரம் நடைபெற்ற தீவிர விவாதத்திற்குப் பிறகு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியது. மத்திய அரசின் தீவிர முயற்சிக்குப் பின்னர் இந்த மசோதா நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.