மன்மோகன் சிங் திரைப்படத்தை வெளியிட முடியாது: காங்கிரஸ் மிரட்டல்

  Newstm Desk   | Last Modified : 28 Dec, 2018 05:40 pm
congress-leader-s-warning-for-manmohan-singh-movie

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இல்லையென்றால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்றும் அக்கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.

மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தை மையமாக வைத்து "தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" எனும் ஹிந்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு தமது அனுபவங்களை தொகுத்து எழுதியுள்ள புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் வேடத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் ஜனவரி 11 -ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னோட்டமாக படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

அதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை குறிப்பிட்டு, மகாராஷ்டிர மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜித் தாம்பி படேல், படத்தின் தயாரிப்பாளருக்கு  கடிதம் எழுதியுள்ளார். 

அதில்,"தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" திரைப்படத்தின் டிரெய்லரில், மன்மோகன் சிங் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகிவிடுவதாக சோனியா காந்தியிடம் கூறுவது போலவும், அதற்கு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், ராகுலை எப்படி பிரதமர் பொறுப்பை ஏற்க வைக்க முடியும்? என அவர் கேட்பது போன்ற சில சர்ச்சைக்குரிய  காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எனவே, இந்தத் திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு அதனை முழுமையாக எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். அதன்பின் நாங்கள் குறிப்பிடும் ஆட்சேபகரமான, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகுதான் படத்தை வெளியிட வேண்டும். 

இல்லையெனில், திரைப்படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், உள்கட்சி விவகாரங்களை காட்சிப்படுத்தியுள்ளதை ஏற்றுகொள்ள முடியாது" என தமது கடிதத்தில் படேல் தெரிவித்துள்ளார்.

2:43 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படத்தின் டிரெய்லரை,  தமது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாஜக, ஒரு குடும்பம்  இந்த தேசத்தை 10 ஆண்டுகள் எப்படியெல்லாம் சீரழித்துள்ளது என்ற உண்மையை காணுங்கள் என விளம்பரம் செய்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close