டைட்டானியம் வெட்டி எடுக்கும் உரிமம்: காங்கிரஸ் அரசுகளுக்கு ரூ.129 கோடி லஞ்சம்!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 05:05 pm
18-5-million-dollars-in-bribes-to-congress-run-govts-in-andhra-and-the-center

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள டைட்டானியம் கனிமத்தை வெட்டி எடுக்கும் பணிக்கான உரிமத்தைப் பெற, முந்தைய மத்திய காங்கிரஸ் அரசுக்கும், ராஜசேகர் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில காங்கிரஸ் அரசுக்கும்  129 கோடி ரூபாய் அளவுக்கும் லஞ்சமாக தரப்பட்டுள்ள விஷயம் தற்போது மீண்டு்ம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த முறைகேட்டில்,  ராஜசேகர் ரெட்டியின் ஆலோசகரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரான கே.வி.பி.ராமசந்திரா ராவ் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

ஆந்திரத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதி டைட்டானியம் கனிம வளம் கொட்டி கிடக்கும்  பகுதியாகும். இங்கிருந்து அந்த கனிமத்தை வெட்டி எடுத்து, விமானம் கட்டும் நிறுவனமான போயிங் உள்ளிட்டவற்றுக்கு தருவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3,443 கோடிக்கு லாபம் ஈட்ட உக்ரைனை சேர்ந்த டெமிட்ரி ஃப்ர்டாஷ், ஹங்கேரியைச் சேர்ந்த ஆந்த்ராஸ் நூப் உள்ளிட்ட 5 வர்த்தகர்கள் திட்டமிட்டனர்.

2005 - 06 காலக்கட்டத்தில் தீட்டப்பட்ட இத்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள், அப்போதைய ஆந்திர மாநில முதல்வரான ராஜசேகர் ரெட்டியின் ஆலோசகராக இருந்த கே.வி.பி.ராமசந்திர ராவை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த உரிமத்தை பெறவதற்காக அப்போது மத்தியிலும்,  ஆந்திர மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு பல்வேறு நிலைகளில் ரூ.129 கோடிக்கு லஞ்சம் தரப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் மத்திய நீதி துறையின் மூலம் கடந்த 2013 ஜூன் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, விஷயம் நீதிமன்றத்துக்கு சென்றது.

இந்த முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிஐடி -க்கும், சிபிஐ-க்கும் ஆந்திர உயர்நீதிமன்றம் தொடர்ந்து கேள்வியெழுப்பி கொண்டிருந்தது.

இதையடுத்து,டெமிட்ரி ஃப்ர்டாஷ் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் கடந்த 2014 மார்ச் 12 -ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இருப்பினும் 21-ஆம் தேதியே அவர்  நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதன் எதிரொலியாக, சர்வதேச குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்படும் "ரெட் கார்னர்" நோட்டீஸ், கேவிபி ராவுக்கு எதிராக, கடந்த 2014 ஏப்ரல் 11 -ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும், கே.வி.பி.ராமசந்திர ராவ் மாநில அளவிலும்,  தேசிய அளவிலும் அரசியல் செல்வாக்குமிக்க நபராக இருப்பதால், இந்த வழக்கில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள டெமிட்ரி ஃப்ர்டாஷ் உள்ளிட்ட நபர்கள்,  அமெரிக்காவிலும் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர். 

எனவே, அமெரிக்க அரசுடன் இணைந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த சிபிஐ தற்போது முனைந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close