தேடப்படும் பொருளாதார குற்றவாளி மல்லையா: மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

  விசேஷா   | Last Modified : 05 Jan, 2019 04:29 pm
mallya-is-a-fugitive-offender


பொதுத்துறை வங்கியில், பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவித்து, மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
எஸ்.பி.ஐ., உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில், ஒன்பது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற, பெங்களூரை சேர்ந்த கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா,  அதை திரும்பி செலுத்தாமல், பிரிட்டன் நாட்டிற்கு தப்பிச் சென்றார். 

அவர் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது சில சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மல்லையாவை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த மத்திய அரசு, அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டனும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பொருளாதார குற்றவாளிகளை தண்டிக்கும் வகையிலும், அவர்களின் சொத்துக்களை முடக்க ஏதுவாகவும், சமீபத்தில் பார்லிமென்ட்டில் சட்ட திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 

மல்லையா மீதான சட்ட விரோத பணப்பரிவர்த்தனை குறித்த வழக்கை விசாரித்து வரும்,  மும்பை சிறப்பு கோர்ட், புதிய சட்டத்தின் படி, மல்லையாவை, தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக இன்று(சனிக்கிழமை) அறிவித்தது. 

இதையடுத்து, மல்லையா மற்றும் அவரது நிறுவனத்தின் பெயரிலான சொத்துக்களை முடக்குவதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம், விரைவில் அவரது சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு, அவற்றை ஏலம் விட்டு, கடன் தொகையை ஈடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close