மதத்தின் பெயரால் மக்களுக்கு இடையே மோதல்களை தூண்டினால், அவர்களை கருணை இன்றி ஒடுக்குவோம் என கேரள முதல்வர் பிணராயி விஜயன் எச்சரித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல் படுத்தும் முயற்சியில் மாநில அரசும், அதை தடுக்கும் விதத்தில் போராட்டகாரர்களும் பனிப்போர் நடத்தி வருகின்றனர். மகர விளக்கு பூஜைக்காக தற்போது சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜனவரி 2-ஆம் நாள் கனகதுர்கா, பிந்து என்னும் இரு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் போலீசாரால் முறைகேடாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, கேரளா முழுவதும் போராட்டங்கள் வலுக்க தொடங்கியுள்ளன. வன்முறைகளில் ஈடுபட்டதாக இதுவரை 5,768 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4,980 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாகவும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் கேரளா மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கில் இதே நிலை தொடர்ந்தால் ஆட்சியை கலைக்கும் அளவுக்கு அரசியலமைப்பு ரீதியிலான விளைவுகளை கேரள அரசு சந்திக்க நேரிடும் எனவும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
இரானியின் எச்சரிக்கைக்கு, தனது முகநூல் வாயிலாக பதில் அளித்துள்ள கேரள முதல்வர் பிணராயி விஜயன், சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க. தலைமை தனது கேரள மாநில நிர்வாகிகளை கட்டுக்குள் வைக்க வேண்டும். மதமோதல்களை தூண்ட முயலுபவர்கள் கருணையின்றி ஒடுக்கப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவது அரசின் கடமை என்று, இரானிக்கு பதிலிலளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
ஆர்.எஸ். எஸ், பாஜக, சங்பரிவார் அமைப்பினரைத் தவிர வேறு யாரும் வன்முறைகளில் ஈடுபடவில்லை, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் கேரள முதல்வர் பிணராயி விஜயன் எச்சரித்துள்ளார்.