பாரத் பந்த் - வெற்றியா, தோல்வியா?

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 01:56 pm
bharath-bandh-partially-affected-across-the-country

மத்திய தொழிற்சங்க யூனியன் (சி.டி.யூ.) சார்பில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் பாரத் பந்துக்கு ஓரளவு ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. போராட்டத்துக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும் பொது சேவைகள் அவ்வளவாக பாதிப்படையவில்லை.

தொழிற்சங்க அமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுதி சி.டி.யூ. சார்பில் 48 மணி நேர பாரத் பந்த் நடத்தப்படுகிறது. ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்க அமைப்புகள் சி.டி.யூ. தொழிற்சங்க யூனியனில் உள்ளன. இந்த தொழிற்சங்கங்களில் உள்ள மின்சார வாரிய ஊழியர்கள், வங்கிப் பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், காப்பீட்டுக் கழக பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

எனினும், இடதுசாரிகள் கணிசமான அளவில் உள்ள கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே பந்துக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. அதிலும், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பந்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சித் தொண்டர்களுக்கும், இடதுசாரி கட்சிகளின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கொல்கத்தா, அசான்சோல்,ஹூக்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்பகுதிகளில் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன.

 

கேரள மாநிலத்தில் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களின் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிக்கு வராததால் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வேலைநிறுத்தத்தை சமாளிக்கும் வகையிலான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்து போக்குவரத்து பரவலாகப் பாதிக்கப்பட்டது. அதேபோன்று ஒடிஸா மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதே சமயம், நாடெங்கிலும் வங்கிகள் வழக்கம்போல இயங்கின. குறிப்பாக, தனியார் வங்கிகளின் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆட்டோ, டாக்ஸி போன்ற சேவைகளும் பாதிக்கப்படவில்லை. 

தமிழகத்தில் ஆங்காங்கே பரவலான இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால், பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள், வங்கிச் சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இருப்பினும், கர்நாடகம், கேரளா செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close