130 வயது முதலைக்கு அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Jan, 2019 11:46 am

village-people-pay-last-rites-to-a-crocodile

சத்தீஸ்கர் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் இறந்த 130 வயது முதலைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பவாமோகதாரா என்னும் கிராமத்தில் ஒரு பெரிய குளம் உள்ளது. அந்த குளத்தில் ஒரு முதலை வெகு நாட்களாக வசித்து வந்துள்ளது. இத்தனை ஆண்டு காலத்தில் அந்த குளத்திற்கு குளிக்க வருபவர்களை ஓர் முறைகூட இந்த முதலை கடித்தது இல்லை என்பது ஆச்சரியத்துக்குரிய செய்தியாக உள்ளது.

 அங்குள்ள மக்களை சிறிதும் பயமுறுத்தாமல் வெகு காலமாக இருந்து வந்த அந்த முதலைக்கு அவ்வூர் மக்கள் கங்காராம் என பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். அத்துடன் கிராம மக்கள் அளிக்கும் பருப்பையும் சாதத்தையும் முதலை விரும்பி சாப்பிடுவது மற்றொரு ஆச்சரியமான விஷயம் ஆகும். 

வனத்துறையினரால் 130 வயது என கணக்கிடப்பட்ட அந்த முதல‌ை‌ ஊருக்கு புதியதாக வருபவர்கள், குளத்திற்கு குளிக்க வரும்போது, தன்னைக் கண்டு அஞ்சுவார்கள் என உணர்ந்ததாலோ என்னவோ அந்த நேரத்தில் மட்டும் குளத்தின் அக்கரைக்கு தானாகவே சென்று விடும். அவர்கள் குளித்து விட்டுச் சென்ற பிறகு, அந்த முதலை அது இயல்பாக அந்தக் குளத்தில் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

 கிட்டத்தட்ட  உணவு உண்ணும் வழக்கத்தில் கிட்டத்தட்ட சைவ உணவையே விரும்பி உண்று வந்த அந்த முதலையான கங்காராம் குளத்தின் கரையில் அசைவற்று கிடந்ததைக் கிராம்வாசி கண்டுள்ளார்.  இதையடுத்து உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் உடனடியாக அங்கு விரைந்த வன இலாகா அதிகாரிகள் முதலை இறந்து விட்டதை உறுதிப் படுத்தினர். 10 அடி நீளமுள்ள அந்த முதலை  வயது முதிர்வால் மரணம் அடைந்தது தெரியவந்தது.

அதன் பிறகு வனத்துறையினர் கிராம மக்களிடம் முதலையின் உடலை ஒப்படைத்தனர். கிராம மக்கள் ஒன்று கூடி அந்த முதலைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். மனிதர்களுக்கு செய்வதைப்போன்ற ஈமச்சடங்குகளை, அந்த முதலைக்கும் செய்து அதை குளத்தங்கரையிலேயே கிராம மக்கள் புதைத்துள்ளனர். அந்த இடத்தில் முதலைக்கு ஒரு சிலை வைக்க கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.