கள்ளக் காதல் சந்தேகம்: மருமகனை கொன்ற தாய்மாமன் கைது

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 11:35 am
killer-man-arrest-after-3-years

தன் காதலியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, சொந்த மருமகனையே கொலை செய்து, அவரை காணவில்லை என போலீசில் புகாரும் அளித்து நாடகமாடிய நபரை டில்லி போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர், விஜய் குமார் மஹரானா, 37. இவரது காதலி, 2012ல் பணி நிமித்தமாக டில்லி சென்றதால், விஜயும் டில்லிக்கு பணி மாறுதல் பெற்று சென்றார். விஜயும், அவரது காதலியும், துவாரகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 

ஐதராபாத்தில் இருந்த, விஜயின் மருமகன், அதாவது சகோதரியின் மகன் ஜெய் பிரகாசுக்கு, 2015ல் டில்லியில் வேலை கிடைத்தது. 
 இதையடுத்து, தாய் மாமனின் வீட்டில் தங்கி, ஜெய் பிரகாஷ்  வேலைக்கு சென்று வந்தார். காலப்போக்கில், ஜெய் பிரகாஷ் மற்றும் விஜயின் காதலி இடையே நட்பு வலுத்தது. 

இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், தன் காதலியுடன், மருமகன் ஜெய் பிரகாஷ் கள்ள உறவு வைத்திருந்ததாக சந்தேகப்பட்டார். 

வீட்டில் தன் காதலி இல்லாத நேரம் பார்த்து, மருமகனை கொலை செய்து, அவர் தங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தின் தோட்டத்தில் அவரின் உடலை புதைத்துவிட்டார். 

பின், ஒரு வாரம் கழித்து, வேலைக்கு சென்ற ஜெய் பிரகாஷ், வீடு திரும்பி ஒரு வாரம் ஆவதாகவும், அவரை காணவில்லை என்றும் டில்லி போலீசில் புகார் அளித்தார்.

2015ல் நடந்த இந்த சம்பவத்திற்குப் பின், சில நாட்களில், அந்த வீட்டை காலி செய்து, அங்கிருந்து சென்று விட்டார். இந்த புகார் குறித்து எந்த துப்பும் கிடைக்காமல், போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம், அந்த குடியிருப்பு கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடந்தன. அப்போது, அந்த இடத்தில் சில எலும்பு கூடுகள் கிடைத்தன.

அது ஜெய் பிரகாஷின் எலும்புகள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை துரித்தப்படுத்திய போலீசார், கொலை நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின், குற்றவாளி விஜயை, ஐதராபாத்தில் கைது செய்தனர். 

மருமகனை கொன்றதை ஒப்புக் கொண்ட விஜய், கொலைக்குப் பின், தன் சிம் கார்டை துாக்கி வீசி விட்டு, வங்கிக் கணக்குகளில் இருந்த பணத்தை எடுத்த பின், அவற்றில் எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ளாமல், விஜயவாடாவுக்கும், பின் ஐதராபாத்துக்கும் சென்று விட்டதாக கூறினார். 

கள்ளக்காதல் சந்தேகத்தால், தாய்மாமன், சொந்த மருமகனையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close