மத்திய அரசில் பாரதிய ஜனதா பதவியேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், ஆமாதாபாத் நகரில் "வைபரன்ட் குஜராத்" எனும் சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, வணிக பொருள்கள் விற்பனை கண்காட்சியை பிரதமர் மோடி நேற்றிரவு தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவுக்கு பிறகு அவர் கூறியதாவது:
சிறுதொழில் முனைவோருக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள இணைய வழி வர்த்தக சேவையின் மூலம் இதுவரை ரூ.16,500 கோடி அளவுக்கு வணிகம் நடைபெற்றுள்ளது.
நுகர்வோர் மற்றும் வணிகர்களின் ஆலோசனைபடி, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உற்பத்தித் துறை, சேவைத் துறை மற்றும் சுற்றுலாத் துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மோடி தெரிவித்தார்.
மத்திய பாஜக ஆட்சியில், புதிய வேலைவாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. மாறாக வேலையிழப்புகள் தான் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மோடி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in