சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முற்பட்ட, 50 வயதுக்கு உள்பட்ட இரண்டு பெண்களை காவல்துறை இன்று காலையில் திருப்பி அனுப்பியது. பம்பை அருகே மிகத் தீவிரமான போராட்டங்கள் நடைபெறுவதை சுட்டிக் காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா சஜேஷ் ஆகிய இரண்டு பெண்கள் கடந்த வாரம் சபரிமலைக்கு செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. அந்த இருவரும் இன்று சபரிமலை செல்வதற்காக மீண்டும் முயற்சித்தனர். பம்பையில் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை, போராட்டம் நடைபெறுவதை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பியது.
முன்னதாக, சபரிமலையில் 5 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதியில்லை என்ற பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் வகையில் உச்சநிதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதன் அடிப்படையில் 51 பெண்கள் இதுவரையிலும் வழிபாடு நடத்தியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு நேற்று தெரிவித்தது. அதில், முதலில் சென்ற கனகதுர்கா, பிந்து ஆகிய பெண்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் கணக்கில் கொண்டு, கேரள அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
newstm.in