ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி நேற்று தேசியக் கொடியேற்றப்பட்டது. அங்கு மூவர்ணக் கொடியேற்றப்படுவது வரலாற்றிலேயே இது முதல்முறையாகும்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட விழாக்களின்போது ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் தேசியக் கொடியேற்றப்படும் என்றாலும், பிரிவினைவாதிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக பிற பகுதிகளில் கொண்டாட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்காது. அந்த வகையில் ஸ்ரீநகர் மாநகராட்சி அலுவலகத்தில் இதுவரை தேசியக் கொடியேற்றப்பட்டதே கிடையாது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது மாநகர மேயர் ஜுனைத் ஆஸிம் மட்டூ தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதுகுறித்து டுவிட்டரில் ஜுனைத் ஆஸிம் வெளியிட்ட பதிவில், “ஸ்ரீநகர் மாநகராட்சியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டேன். உங்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலை தேசிய மாநாட்டுக் கட்சி புறக்கணித்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்டு ஜுனைத் ஆஸிம் மேயர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in