காஷ்மீரை சிதைத்த பனிச்சரிவுகள்; 12 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 10:34 pm
multiple-avalanches-in-kashmir-kills-12

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பெரும் பனிச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டதில், 12 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு காவல் சாவடியில், போலீஸ் அதிகாரிகள் 5 பேர் மற்றும் இரண்டு கைதிகள் புதைந்து பலியாகினர்.  

ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத அளவு பனி பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பனிச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் முக்கியமாக, ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் உள்ள ஜவகர் சுரங்கப்பாதை பகுதியில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. ஒரு காவல்துறை சாவடி முழுவதும் பனியால் மூடப்பட்டது. இந்த சம்பவத்தில் 7 பேரின் உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன. 5 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 2 கைதிகள் இந்த சம்பவத்தில் பலியானதாக தெரியவந்துள்ளது. பனிச்சரிவை கண்டு காவல்துறை சாவடிக்குள் அவர்கள் பதுங்கியதாகவும், பனி மூடியதால் அங்கேயே அவர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவகர் சுரங்க பனிச்சரிவு சம்பவத்தில், 10 பேர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், நேற்று ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதேபோல, ரம்ஸூ ரம்பன் பகுதியில், ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 2 பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அனந்த்நாக்கில் உள்ள கோகர்நாத் என்ற இடத்தில், பனிச்சரிவால் ஒரு வீடு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்களின் பெற்றோர், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். 

பல்வேறு இடங்களில் இதுபோன்ற பனிச்சரிவு சம்பவங்கள் நடைபெற்றதாகவும், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அதன் பாதிப்பு குறித்து இன்னும் முழு தகவல்கள் கிடைக்காததாகவும் காஷ்மீர் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close