நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரை..!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 06:32 pm
modi-s-speech-in-parliament

மத்திய பாஜக தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியின் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி  நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உருக்கமான உரையின் சாராம்சம்..

இந்த அவையில் வீற்றிருக்கு அனைத்து உறுப்பிர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2014 மக்களவை தேர்தலில் நான் முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்முறையாக இந்த அவைக்குள்ளும் நுழைந்தேன். 

அப்போது, இங்கு பின்பற்றப்படும் எவ்வித நடவடிக்கைகளும் எனக்கு தெரியாது. எனினும், நான் புதியவன் என்ற அச்சம் ஏற்படாத வகையில், அனைத்து கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து எனக்கு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். ஏழை, எளிய மக்கள் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 

பல்வேறு சட்டதிருத்தங்கள் இந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அரசு முழு மனதுடன், நாட்டு மக்களுக்காக, 100 சதவீதத்திற்கு மேல் பணியாற்றியுள்ளது. 

இந்த அரசின் செயல்பாட்டிற்கும், நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளித்த, ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மற்றும் பார்லிமென்ட் அலுவலர்கள் என அனைருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’

நம் நாட்டில், பெண்களுக்கென தனி மரியாதை, அந்தஸ்து எப்போதும் இருந்து வருகிறது. அந்த வகையில் தான், அவர்கள் குடும்ப நிர்வாகத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தலைமையில் தான், குடும்பம் திறம்பட நடத்தப்பட்டு வருகிறது.

அதே போல், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் பெண் அமைச்சர்கள் ஈடுபட்டிருப்பது பெருமை அளிக்கிறது. ராணுவ அமைச்சராக, நிர்மலா சீதாராமனும், வெளியுறவு அமைச்சராக சுஷ்மா சுவராஜும் திறம்பட செயலாற்றி வருகின்றனர். இது, இந்த அரசுக்கு மிகுந்த பெருமையை தேடித்தந்துள்ளது’’ 

முன் எப்போதும் இல்லாத வகையில், 16வது மக்களவையில், எம்.பி.,க்களின் வருகை பதிவு திருப்திகரமாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, உறுப்பினர்களின் கடமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது. பா.ஜ., மட்டுமின்றி, எதிர் அணியை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.,க்களின் வருகையும் மிக முக்கியம் என்பதால், அவர்களில் பெரும்பாலானாேர், அதிக நாட்கள் அவை கூட்டத்தில் பங்கேற்றது நம் ஜனநாயக அமைப்புக்கு கிடைத்த மாபெரும் பெருமையாகும். 

மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக எம்.பி.,க்களை இங்கு அனுப்பியுள்ளனர். எனவே எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடமை உணர்ந்து செயல்படுவதே ஜனநாயகத்திற்கு  ஆற்றும் கடமை என்பதை, பெரும்பாலான உறுப்பினர்கள் உணர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது’’ என அவர் பேசினார். 

மேலும், மக்களவை விவாதங்களில் பங்கேற்பது, உறுப்பினர்களின் கடமை. பெரும்பாலான நேரங்களை அவையில் செலவழிப்பது சிறந்த எம்.பி.,க்கான அழகாகும். அந்த வகையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை போலவே, எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, தன் கடமையை திறம்பட ஆற்றியுள்ளார். அவையின் நடவடிக்கைகளில் அதிக நேரம் பங்கேற்பது என்பது, பெருமைக்குரிய விஷயம். அதை அவர் செய்துள்ளார். அவருக்கு என் பாராட்டுகள்’’ என்றார். 

தொடர்ந்து பேசிய பிரதமர், ‛‛கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்த சபை எத்தனையோ விசித்திரமான நிகழ்வுகளை சந்தித்துள்ளது. அதில், கட்டிப்பிடித்தலுக்கும், கட்டிப்பிடிக்கப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை நான் இங்கு தான் தெரிந்து கொண்டேன். கண்களால் பேசும் நயன பாஷையையும் இங்கு தான் கண்டறிந்தேன். 

அந்த குறிப்பிட்ட அவை உறுப்பினரின் இது போன்ற செயல்பாடுகள், ஊடகங்களுக்கும் நல்ல தீனியாக அமைந்தது. நாட்டு மக்களிடையே நகைச்சுவை உணர்வை ஊட்டியது’’ என பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய ஆட்சியின் நாடாளுமன்ற இறுதி உரையில் உணர்ச்சிகரமாக பேசியதோடு மட்டுமல்லாமல் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற அலுவலகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவரின் உரையை நிறைவு செய்தார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close