ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை: சி.ஏ.ஜி., அறிக்கையில் ‛பளீச்’

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 06:38 pm
new-rafale-deal-2-8-cheaper-than-upa-agreement-cag-report

‛மத்திய, பா.ஜ., அரசு மேற்கொண்டுள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தம், முந்தைய காங்., அரசு முயன்றதை விட, 2.8 சதவீதம் விலை மலிவானது’ என, சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ‛இந்த ஒப்பந்தத்தில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது போல் எந்த ஊழலும் நடைபெறவில்லை’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், விமானப் படைக்கு தேவையான, நவீன ரக ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், முந்தைய காங்., தலைமையிலான அரசு முயற்சித்ததை விட, தற்போதைய, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பியதாேடு, பார்லிமென்ட்டை முடக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தன. 

இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை பார்லிமென்ட்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், ரபேல் விமானம் வாங்குவது தொடர்பாக, முந்தைய காங்., அரசின் ஒப்பந்த புள்ளியை விட, தற்போதைய பா.ஜ., அரசு 2.8 சதவீதம் விலை குறைவாக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

குறிப்பாக, இந்தியாவுக்கு மட்டுமே தேவைப்படும் சில சிறப்பு அம்சங்களுடன் போர் விமானம் வடிவமைக்கப்படும் விஷயத்தில், அதன் விலை, 17.8 சதவீதம் மலிவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

எனினும் இந்த அறிக்கையை ஏற்க மறுப்பதாக கூறி, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ‛‛ ரபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதை ஆமோதிக்கும் வகையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சி.ஏ.ஜி., அறிக்கையும் அமைந்துள்ளது. இதற்கு மேலும் இது குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்தால், அது மிகவும் கண்டிக்கத்தக்கது’’ என அவர் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close