உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிரடியான பேச்சுகளுக்கு பெயர் பெற்ற, எம்.ஐ.எம். கட்சியின் எம்.பி. அஸாதுதீன் ஒவைஸி, அலிகர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, பல்கலைக்கழக மாணவர் சங்க அமைப்பினருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஏபிவிபி உறுப்பினர் ஒருவரது பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதற்கிடையில், மாணவர்களின் போராட்டத்தை படம்பிடித்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் குழுவுடனும் மாணவர் சங்கத்தினர் வாக்குவாதம் செய்தனர். பின்னர், ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் முன்னிறுத்தி மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சில மாணவர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்றும், இந்தியா ஒழிக என்றும் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏபிவிபி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர் சங்கத் தலைவர் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் உள்பட 14 மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
newstm.in