காஷ்மீர் புட்காம் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் கடத்தியதாக வந்த செய்திக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் உள்ள குவாஜிபுரா சதோரா பகுதியில், ராணுவ வீரர் முகமது யாசின் என்பவரை தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. விடுப்பில் இருக்கும் முகமது யாசினை, அவரது வீட்டிற்கு சென்று தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இதையடுத்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ராணுவ வீரர் தற்போது விடுப்பில் தான் உள்ளார். கடந்த பிப்ரவரி 26ம் தேதி சொந்த ஊருக்குச் சென்ற முகமது யாசின், தற்போது வீட்டில் பாதுகாப்பாக தான் இருக்கிறார் என்று விளக்கம் தெரிவித்துள்ளது.
இது தவிர, இன்று ஜம்மு- காஷ்மீர் கிஸ்துவார் என்ற பகுதியில் தனி பாதுகாப்பு அதிகாரியின் வீட்டிற்கு சென்று துப்பாக்கி முனையில் அதிகாரியின் ஏ.கே.47 துப்பாக்கி சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். துப்பாக்கியை திருடி சென்றவர்கள் தீவிரவாதிகளாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், நேற்று இரவு முதல் காஷ்மீர் பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
newstm.in