மத்திய அரசின் 'மெகா' ஓய்வூதிய திட்டம்: இனி மாதம் ரூ.3000 பெறலாம்!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 03:30 pm
pm-modi-launches-a-monthly-pension-scheme-of-3-000-5-things-to-know

நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை அறிவிப்பது வழக்கம். முக்கியமாக மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, ஒட்டுமொத்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு மெகா திட்டங்கள் அறிவிக்கப்படும். 

அதன்படி, கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 'பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் யோஜனா' (Prime Minister Shram Yogi Mandhan Pension Yojana) என்ற பெயரில் ஒரு 'மெகா' பென்சன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக, முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்த திட்டமும் அப்போதே தொடங்கப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது. சரி, இந்த திட்டம் என்ன? யாருக்கு பயன்படும்? எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

யாருக்கு இந்த திட்டம்?

►  அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மட்டுமே இந்த மெகா ஓய்வூதிய திட்டம்.  

►  இதற்கு மாத ஊதியம் ரூ.15,000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். 

►  தொழிலாளர்கள், தேசிய ஓய்வூதிய திட்டம், பி.எப் என எந்த ஓய்வூதிய திட்டத்திலும் இல்லாதவர்கள் தான் இந்த மெகா பென்ஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். 

►  தற்போது 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

►  இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்மூலம் 10 கோடி பேர் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயன்? 

►  இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.55 லிருந்து ரூ.100 வரை ப்ரீமியமாக செலுத்தலாம். அதாவது ஒருவர் 18 வயதில் இந்த திட்டத்தை தொடங்கினால் மாதம் ரூ.55 செலுத்தினால் போதுமானது. வயதை பொறுத்து ப்ரீமியம் தொகை மாறுபடும். அதிகபட்ச ப்ரீமியம் தொகை ரூ.100 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

►  50:50 என்ற விகிதாசார அடிப்படையில் தொகை ஒவ்வொரு மாதமும் உங்களது வங்கிக்கணக்கில் சேரும். அதாவது நீங்கள் ரூ.55 ரூபாய் செலுத்தினால் அரசின் சார்பில் ரூ.55 செலுத்தப்படும். 

►  60 வயதுக்குப் பிறகு, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3000 என்ற அளவில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒருவேளை ப்ரீமியம் தொடங்கிய நபர் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டால், அவரது கணவன்/மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். 

►  மேலும், 10 வருடங்களுக்குள்ளாக நீங்கள் இந்த திட்டத்தில் இருந்து வெளியேற விரும்பினால், நீங்கள் எவ்வளவு தொகை செலுத்தினீர்களோ, அதற்கு வங்கியின் குறைந்தபட்ச வட்டியுடன்,தொகையை பெற்றுக்கொள்ளலாம். 

►  10 வருடங்களுக்கு பிறகு, உங்களுக்கு தொகை தேவைப்படும் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது.

எப்படி பெறுவது?

►  இந்த ஓய்வூதிய திட்டத்தை பெற அரசின் இ-சேவை மையத்தை அணுகவும்.

► உங்களது வங்கிக்கணக்கு மற்றும் ஆதார் எண், நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் தேவை. 

► இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியானவரா என்று சோதிக்கப்பட்ட பிறகு,  அரசின் இ-சேவை மையத்தில் உங்களுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும். அதை வைத்து நீங்கள் உங்களுக்கான தொகையை எப்போது வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close