ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கையில் 'மிஸஸ் காந்தி' என்ற பெயர்!

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 03:38 pm
michel-identified-ap-as-ahmed-patel-ed-chargesheet-in-agustawestland-case

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணைப்பத்திரிக்கையில், 'மிஸஸ் காந்தி' என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த முறை மத்தியில் ஆட்சியில் இருந்த போது,  முக்கிய பிரமுகர்களின் உபயோகத்திற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் ரூ.423 கோடி, லஞ்சம் என்ற பெயரில் பணமோசடி நடந்துள்ளது பின்னர் தெரிய வந்தது. 

இவ்வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இவ்வழக்கில், இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, இடைத்தரகர்கள் ராஜீவ் சக்சேனா, சக்சேனாவின் மனைவி ஷிவானி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உறவினர் கிறிஸ்டியன் மிஷெல் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கிறிஸ்டியன் மிஷெல் மற்றும் ராஜீவ் சக்சேனா ஆகிய இருவரும் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேலும்,சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாறினார். மேலும், அவர் தன்னுடைய டைரி மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பென் டிரைவ் ஆகியவற்றையும் அமலாக்கத்துறையிடம் அளித்தார். 

தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை, 52 பக்கங்களுடன் கூடிய 4வது துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில், 'மிஸஸ் காந்தி' என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், மிஸஸ் காந்தி என்பது யாரை குறிக்கிறது மற்றும் அவரது விபரங்கள் எதுவும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெறவில்லை. 

மேலும், மிஷெல் அளித்த டைரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குற்றப்பத்திரிகையில், AP, FAM, Italy woman's son உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. இதற்கு மிஷெல் தரப்பில், 'அஹமது பட்டேல்' (AP), பேமிலி (FAM) 'இத்தாலி பெண்ணின் மகன்',  'வருங்கால இந்திய பிரதமர்' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. 

மேலும், எகனாமிக் டைம்ஸ் நிருபர் மனு பப்பி, இண்டியன் எக்ஸ்பிரஸின் ராஜு சந்தானம், இந்தியா டுடே பத்திரிகையின் ஷேகர் குப்தா ஆகிய மூன்று பத்திரிக்கையாளர்களின் பெயர்களும் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அதேபோன்று, டைரியின் 22ம் பக்கத்தில் இத்தாலி பெண்ணின் மகனுடன் நடந்த உரையாடல் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு தலைதூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close