தோனியே என் ராேல் மாடல்:  சையது அக்பருதீன் நெகிழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 02:57 pm
dhoni-is-my-role-model-syed-akbahrudeen

‛‛மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வைப்பதற்கான பணிகளில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வழியை பின்பற்றினேன். அவர் தான் எனக்கு ரோல் மாடல்’’ என, ஐ.நா.,வுக்கான மத்திய அரசின் நிரந்தர உறுப்பினர் சையது அக்பருதீன் கூறியுள்ளார். 

ஜெய்ஸ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாக, இந்தியா பல ஆண்டுகளாக போராடி வந்தது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பினர் அந்தஸ்த்து பெற்ற நாடுகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரித்தால் மட்டுமே, மசூத்தை பயங்கரவாதியாக அறிவிக்க முடியும் என்ற நிலை இருந்தது. 

அப்போது, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், இந்தியாவின் கருத்தை ஏற்றாலும், சீனா தொடர்ந்து எதிர்த்து வந்தது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வந்தது. 

நம் நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு, பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பே காரணம் என தெரிந்தும், சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வந்தது. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில், அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை, மத்திய அரசு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்தது. 

இதற்கான பணிகளில், ஐ.நா.,வுக்கான நம் நாட்டின் நிரந்தர உறுப்பினர், சையது அக்பருதீன் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பின் அதிகாரி, ஆசிப் இப்ராகிம் ஆகியோர், இரவு, பகல் பாராமல் ஈடுபட்டனர். 

அதன் பலனாய், ஜெய்ஷ் - இ - முகமது இயக்கம், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதும், அவர்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதும் இதில், அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசாருக்கு முக்கிய தொடர்பு இருப்பதும் நிரூபணம் ஆனது. 

இந்த நிலையில் தான், சீனாவும் வேறு வழியின்றி, மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை கைவிட்டது. இதை தொடர்ந்து மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

இது குறித்து, ஐ.நா.,வுக்கான மத்திய அரசின் நிரந்தர உறுப்பினர், சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக இருந்தது. நம் நாட்டில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் நாசவேலைகள் குறித்து ஆதாரங்களை சமர்ப்பித்தும், பாகிஸ்தான் அதை ஏற்க மறுத்தது. 

அதே சமயம், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா குரல் காெடுத்து வந்தது. எனினும், பல்வேறு முக்கிய மறுக்கப்பட முடியாத ஆதாரங்களை திரட்டி, அவற்றை சமர்ப்பித்து, தற்போது வெற்றி பெற்றுள்ளோம். 

இதற்கான வேலைகள், 2009ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த விஷயத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தான் எனக்கு ரோல் மாடல். எவ்வளவு இக்கட்டான சூழலிலும், பதற்றம் அடையாமல், தான் நினைத்ததை சாதிப்பார். 

அவரின் பொறுமை, திட்டமிட்ட செயல்பாடுகளால் ஆட்டம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், இந்திய அணிக்கு சாதகமாக மாறும். அவரைப் போலவே, பல ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்து, திட்டமிட்டு செயலாற்றியதன் மூலம், தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதன் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close